கோட்டை நோக்கி பேரணி

தி.மு.க அரசு தன் தேர்தல் அறிக்கையில் கூறியபடிகூட தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காததை கண்டித்தும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பா.ஜ.க சார்பில் நேற்று கோட்டையை நோக்கி பேரணியை நடந்தது. எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து கோட்டையை நோக்கி பா.ஜ.க பேரணி நடைபெற்றது. பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் இதில் கலந்துகொண்டனர். முன்னதாக, இந்த பேரணியில் கலந்துகொண்டு பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ‘தி.மு.க அரசு தன் தேர்தல் அறிக்கையில் கூறியபடி பெட்ரோல் டீசல் விலையை உடனடியாக குறைக்க வேண்டும். விடியாத அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மாட்டேன் என்கிறது. பா.ஜ.க வாக்குறுதி கொடுக்காமலே இரண்டு முறை பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது. கடந்த 3 நாட்களாக தி.மு.க அரசு உதயநிதிக்கு ஆதரவாக தீர்மானம் போட்டு வருகிறது. அவர்கள் மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தவில்லை. கோட்டையை நோக்கி நாம் வரப்போகிறோம் என்று தெரிந்ததும் முதல்வர் எஸ்கேப் ஆகி டெல்டா பகுதியை நோக்கி சென்றுவிட்டார். முதல்வர் எங்கே சென்றாலும் பா.ஜ.க விடப்போவதில்லை. நீங்கள் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என்றுதான் கூறுகிறோம். நீங்கள் கொடுக்காத வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்ற சொல்லவில்லை. நீங்கள் கூறியபடி தேர்தல் அறிக்கையை தயாரித்தவர்தான் பதில் சொல்ல வேண்டும் என்றால், டி.ஆர் பாலுவை முதல்வராக்குங்கள். நாங்கள் அவரிடம் கேட்கிறோம். எங்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் பத்திரிகை தர்மத்தை மீறி செயல்படும் தி.மு.க ஆதரவாளர்கள்தான் பிரச்சனை. விடியாத அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன. இன்னும் 750 நாட்கள்தான் இருக்கின்றன. நாம் சுவச் பாரத் 1, சுவச் பாரத் 2 என பற்றி பேசிக்கொண்டு இருக்கிறோம். அவர்கள் கஞ்சா ஆபரேஷன் 1, கஞ்சா ஆபரேஷன் 2 என செய்து கொண்டு இருக்கிறார்கள். சாதாரண பொதுமக்கள் சாலையில் நடக்கவே பயப்படுகிறார்கள். சாலையிலேயே பட்டப்பகலில் கொலைகள் நடக்கின்றன. சட்ட ஒழுங்கு மோசமாகிவிட்டது. இன்னும் 4 நாட்களில் தி.மு.கவின் 2 அமைச்சர்கள் செய்த ஊழல் பட்டியல் வெளியிடப்படும். அவர்கள் விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்துள்ளனர். கச்சத் தீவை கனவில் கூட தி.மு.கவால் மீட்க முடியாது. 20 நாட்களுக்குள் பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசு குறைக்காவிட்டால் மாவட்டந்தோறும் போராட்டம் நடத்தப்படும். அப்போதும் குறைக்கவில்லை எனில் அடுத்த பத்து நாட்களில் திருச்சியில் பா.ஜ.க சார்பில் மாபெரும் பேரணி நடத்தப்படும்’ என தெரிவித்தார்.