நாடாளுமன்ற மாநிலங்களவையில் தற்போது காலியாக உள்ள 57 உறுப்பினர்களுக்கான தேர்தல், வருகிற ஜூன் 10ம் தேதி அந்தந்த மாநிலங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றோடு முடிவடைகிறது. ஒவ்வொரு கட்சிகளும், தங்களின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. அந்த வரிசையில், காங்கிரஸும் தங்கள் கட்சியின் சார்பாகப் போட்டியிடும் 10 வேட்பாளர்களுக்கான, வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அந்த வேட்பாளர் பட்டியலில் தன்னுடைய பெயர் இடம்பெறாதது குறித்து நக்மா டுவிட்டரில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அதில், ‘2003 – 04ல் நான் காங்கிரஸில் நான் இணைந்தபோது, நாங்கள் ஆட்சியில் இல்லை. அப்போது சோனியா காந்தி, என்னை ராஜ்யசபாவிற்கு தேர்ந்தெடுப்பதாக தனிப்பட்ட முறையில் உறுதியளித்திருந்தார். அதன்பிறகு இப்போதுவரை 18 வருடங்கள் ஆகிவிட்டது. இருந்தபோதும் இன்றுவரை எனக்காக ஒரு வாய்ப்பை கூட அவரால் கண்டுபிடிக்க முடியவிலை. ஆனால் மஹாராஷ்டிரா மாநிலங்களவையில் இம்ரானுக்கு இடமளிக்கப்படுகிறது. நான் கேட்கிறேன், நான் என்ன குறைவான தகுதியுடையவளா?” என கேள்வியெழுப்பிருந்தார். மஹாராஷ்டிராவில், காங்கிரசிலிருந்து ஒரு ராஜ்யசபா எம்.பி தேர்ந்தெடுகூடிய நிலையில், மஹாராஷ்டிராவைச் சேர்ந்த தனக்கு வாய்ப்பளிக்காமல், ராஜஸ்தானைச் சேர்ந்த இம்ரானுக்கு வாய்ப்பளித்ததால் நக்மா இப்படி புலம்புவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் வெளியிட்டிருந்த வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றிருந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், தமிழகத்திலிருந்து போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.