காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சமீபத்திய இங்கிலாந்து பயணம், அவரது சர்ச்சைக்குரிய அறிக்கைகள், தன் சொந்த நாட்டுக்கு எதிரான பேச்சு, குறிப்பாக லண்டனில் பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான ஜெர்மி கார்பினுடனான சந்திப்பு போன்றவை நாட்டு மக்களை முகம் சுளிக்க வைத்தன. இந்த சூழலில், அரசியல் ரீதியிலான அவரது இங்கிலாந்து பயணத்துக்கு அவர் வெளியுறவுத் துறையிடம் உரிய அனுமதி பெறவில்லை, அதற்கு தேவையான முறையான நடைமுறைகளை ராகுல் தவிர்த்துவிட்டார் என்று தெரியவந்துள்ளது. இதுகுறித்து ராகுலிடம் வெளியுறவுத்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப முடிவுசெய்துள்ளது. லண்டனில் ராகுல் காந்தி பங்கேற்கும் அதே விழாவிற்குச் சென்ற ராஷ்ட்ரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான பேராசிரியர் மனோஜ் ஜாவுக்கு அரசியல் அனுமதி உள்ளிட்ட அனைத்து அனுமதிகளும் முறையாக கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ராகுல் காந்திக்கு ஒரு நாள் முன்னதாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மனோஜ் ஜா உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.