கேரள மாநிலம் ஆலப்புழாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) நடத்திய அணிவகுப்பின் போது ஒரு சிறுவன் ஹிந்து மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக எழுப்பிய ஆத்திரமூட்டும் முழக்கங்கள் தொடர்பான வழக்கில், கேரள காவல்துறையினர் ஒருவரை கைது செய்துள்ளனர். ஈரட்டுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அனஸ் என்ற அந்த நபர் தான் அந்த சிறுவனை தோளில் சுமந்து சென்றார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், பி.எப்.ஐ மாவட்டத் தலைவர் நவாஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த செயல் குறித்து கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான வி.டி.சதீசன், அரசாங்கத்தின் நிலைப்பாடு ஏமாற்றமளிப்பதாக தெரிவித்துள்ளார். மதச்சார்பற்ற கேரளாவை பிளவுபடுத்தும் வகுப்புவாத நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியே இந்த கோஷம் என்று ஆளும் சி.பி.ஐ(எம்) கட்சியின் இளைஞர் பிரிவான டி.ஒய்.எப்.ஐ குற்றம் சாட்டியுள்ளது. பி.எப்.ஐ அமைப்பு அதன் குறிப்பில், அத்தகைய முழக்கங்கள் அமைப்பின் கொள்கைக்கு எதிரானவை என்றும், இந்த விஷயம் குறித்து பி.எப்.ஐ ஆராயும் என்றும் கூறியுள்ளது.