கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானியில் அரசு நடத்தும் தொழில் படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ICSR) முஸ்லிம்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடும் பட்டியலின பழங்குடியின் மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு கட்டண தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. முஸ்லிம்களுக்கு மிக அதிகமாக வழங்கப்படும் இடஒதுக்கீட்டை எதிர்த்து லத்தீன் கத்தோலிக்கரான அருண் ராய் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். மனுவில், ‘ஒரு குறிப்பிட்ட மத சமூகத்திற்கு கேரள அரசு தேவையில்லாமல் பெரிய அளவில் அனுமதிப்பது சமூகத்தில் வகுப்புவாத பிளவை உருவாக்கும். ஒரு குறிப்பிட்ட மத சமூகத்தைச் சேர்ந்த நிர்வாக சேவைகளில் உள்ள நபர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் சட்டவிரோத முயற்சியில் அரசு ஒருபோதும் பங்கெடுக்கக் கூடாது. மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க முடியாது. ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம், 2005ம் ஆண்டு மாநில அரசு வேலைகளில் வழங்கிய 5 சதவீதம் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. மத ரீதியிலான இடஒதுக்கீடு அரசியல் சட்டத்திற்கு எதிரானது. முஸ்லீம்களுக்கு 80 சதவீதம் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு 20 சதவீதம் சலுகை வழங்கும் சிறுபான்மையினர் நலத் துறையின் உதவித்தொகை திட்டத்தை ரத்து செய்து கேரள உயர் நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளது. சிறுபான்மையினர் நலத்துறை மூலம் சலுகைகள் வழங்குவதற்காக சிறுபான்மையினரை துணை வகைப்படுத்துவது அனுமதிக்கப்படாது என நீதிமன்றம் கூறியுள்ளது. முஸ்லீம் சமூகத்தில் பொருளாதார ரீதியாக வசதி படைத்தவர்கள் கூட இதில் பயனடைகின்றனர். இதற்கு வரி செலுத்தும் குடிமக்களின் பணம் செலவிடப்படுகிறது’ என தெரிவித்துள்ளார். இந்த பொதுநல மனு மீது கேரள உயர்நீதிமன்றம் மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த மனுவுக்கு பதிலளிக்க மாநில அரசு பத்து நாட்கள் அவகாசம் கேட்டது.