கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டிசம்பர் 27, 1988 அன்று, பாட்டியாலாவில் வசிக்கும் குர்னாம் சிங் என்பவருடன், வாகனம் நிறுத்தும் இடம் தொடர்பாக சித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது சித்து மற்றும் அவருடன் இருந்த அவரது நண்பர் ரூபிந்தர் சிங் சந்து, ஆகியோரும் குர்னாம் சிங்கை அவரது காரில் இருந்து வெளியே இழுத்து தாக்கியதில் குர்னாம் சிங் உயிரிழந்தார். இந்த வழக்கு செஷன்ஸ் நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை கடந்த 34 ஆண்டுகளாக பயணித்தது. ஆதாரம் இல்லாததால் விடுதலை, 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை என பல தீர்ப்புகள் நீதிமன்றங்களில் மாறி மாறி வழங்கப்பட்டன. கடைசியாக தற்போது ஓராண்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்த வழக்கில் சித்துவை விடுவித்து 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உயிரிழந்தவரின் குடும்பத்தினர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தற்போது, சித்துவுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.