நூல் பிரச்சனைக்கு நீண்டகால தீர்வு

பருத்தி நூல் விலை வரலாறு காணாத வகையில் தொடர்ந்து உயர்ந்து கொண்டிருப்பதால் பாரதத்தில் ஜவுளித்தொழிலும், அதை நம்பியுள்ளவர்களும் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றன. இந்நிலையில், பருத்தி நூல் உற்பத்தியை மேம்படுத்த ஜவுளி அமைச்சகம், வேளாண்மை அமைச்சகம், வர்த்தக அமைச்சகம், நிதி அமைச்சகம், வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம், இந்திய பருத்தி கழகம் மற்றும் பருத்தி ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் துணையுடன் இந்திய பருத்தி கவுன்சில் அமைக்கப்படும் என மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார். மேலும், ‘பல ஆண்டுகளாக குறைந்து வரும் நூல் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்கான வழிகளை இந்த கவுன்சில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும்.  புகழ்பெற்ற மூத்த பருத்தி மனிதரான சுரேஷ் பாய் கோடக் இதற்கு தலைமை தாங்குவார். இந்த அமைப்பின் முதல் கூட்டம் மே 28ல் நடத்தப்படும். பருத்தி உற்பத்தித்திறன் நாட்டில் மிகப்பெரிய சவாலாக உள்ளது. அதிக பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டாலும் உற்பத்தி குறைவாகவே உள்ளது.  பருத்தி விவசாயிகளின் உற்பத்தித்திறனை மேம்படுத்த வேண்டும், சிறந்த தரமான விதைகளை கிடைக்கச் செய்ய வேண்டும். நூல் விலைப் பிரச்சினை நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், இதில் அரசாங்கத்தின் தலையீட்டை மட்டுமே எதிர்பார்ப்பது சரியல்ல. போட்டி மனப்பான்மை, அதிகப்படியான லாபம் என்ற மனநிலையை தவிர்த்து ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு என்ற உணர்வுடன் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். பருத்தி விவசாயிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும். பருத்தி விவசாயிகள், நூற்பாலைகள் மற்றும் நெசவாளர்கள் ஆகியோரின் நலன்களைப் பாதுகாக்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. 2022 செப்டம்பர் 30ம் தேதி வரை இறக்குமதி ஒப்பந்தங்களுக்கு இறக்குமதி வரியிலிருந்து விலக்கு அளிக்க நூற்புத் துறையின் கோரிக்கையை தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் வர்த்தகர்கள் தங்களிடம் உபரியாக உள்ள பருத்தி, நூலை மட்டுமே ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நாட்டில் மிகப்பெரிய வேலைவாய்ப்பை உருவாக்கும் இந்த உள்நாட்டு தொழில்துறையின் விலைகளை ஏற்றுமதி பாதிக்க அனுமதிக்ககூடாது’ என கோரிக்கை விடுத்தார்.