டெல்லியில் நடைபெற்ற விவசாய போராட்டத்தின் மூலம் புகழ் வெளிச்சத்துக்கு வந்தவர் பாரதிய கிஸான் யூனியனின் ராகேஷ் திகாயத். விவசாயிகளுக்கு உண்மையிலேய அதிக பலன் அளிக்கும் உன்னதமான விவசாய சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி விவசாயிகளை குழப்பி போராட வைத்து வன்முறைகளில் ஈடுபடவைத்தவர் இவர். இவரை தங்களின் முகமூடியாகக் கொண்டு இவரது பின்னணியில் இருந்து செயல்பட்டவை காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள், இடதுசாரி அமைப்புகள், காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்புகள் போன்றவை. இந்நிலையில், தற்போது ராகேஷ் திகாயத்தின் அரசியல் விளையாட்டுகள், அரசியல் கட்சியின் நலன்களுக்காக செயல்படுதல் காரணமாக பாரதிய கிஸான் யூனியன், அவரையும் அவரது சகோதரர் நரேஷ் திகாயத்தையும் பாரதிய கிஸான் யூனியனின் தேசியத் தலைமை பதவியில் இருந்து அந்த அமைப்பு நீக்கியுள்ளது. இதுகுறித்து பேசிய பாரதிய கிஸான் யூனியன் தலைவர் ராஜேஷ் சிங் சௌஹான், “விவசாயிகளின் நலனுக்காக உருவாக்கப்பட்ட எங்கள் அமைப்பை திகாயத் சகோதரர்கள் அரசியலாக்கினர். ராகேஷ் திகாயத் அல்லது நரேஷ் திகாயத் பற்றி எங்களுக்கு எந்த தனிப்பட்டக் கருத்தும் இல்லை. அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்களோ அதை அவர்கள் செய்து கொண்டே இருக்கலாம். ஆனால் அவர்களால் எங்கள் அமைப்பு ஒரு அரசியல் மண்டலமாக மாற்றப்பட்டது. நாங்கள் ராகேஷிடம் எங்கள் கவலைகளை தெரிவித்தோம். இந்த அமைப்பை உருவாக்க நிறைய உழைத்தோம், ஆனால் அவர் ஒரு குறிப்பிட்ட கட்சியை ஆதரிக்கும்படி கேட்டார். அதை நாங்கள் எதிர்க்கிறோம். விவசாயிகளின் பிரச்சனைகளை கவனிப்பதே எங்கள் நோக்கம். நாங்கள் எந்த கட்சிக்காகவும் பணியாற்ற மாட்டோம் என தெரிவித்தோம்” என்று கூறினார். தற்போது இந்த நடவடிக்கையின் காரணமாக பாரதிய கிஸான் யூனியன் இரண்டாக பிளவுபட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.