ஜிப்மரில் ஹிந்தி திணிப்பு இல்லை

புதுவை ஜிப்மரில் இந்தி திணிக்கப்படுவதை கண்டித்து திமுக, மதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. இந்நிலையில் புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புதுவை ஜிப்மருக்கு சென்று அதன் இயக்குனர் ராகேஷ் அகர்வால் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ஜிப்மரில் ஹிந்தி திணிப்பு இல்லை. நிர்வாகரீதியாக அளிக்கப்பட்ட சுற்றறிக்கை தவறாக திரிக்கப்பட்டு ஹிந்தி திணிக்கப்படுவதாக செய்தி உலா வந்துள்ளது. மொத்தம் 4 சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் முதல் 2 சுற்றறிக்கை மட்டும் வெளியில் வந்துள்ளது. இதர சுற்றறிக்கையில் பொதுமக்கள் தொடர்பான கருத்துகள், துறை ரீதியானவை தமிழில் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உள்ளூர் மொழியான தமிழை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜிப்மர் ஒரு மத்திய அரசின் நிறுவனம். இங்கு ஹிந்தி மட்டுமே தெரிந்தவர்களும் பணியாற்றுகின்றனர். அவர்களுக்காக ஹிந்தியை பயன்படுத்த கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில் நோயாளிகளுக்கான மருத்துவ சேவை, நோயாளிக்கான அறிக்கை, குறிப்புகள் தமிழில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஜிப்மரில் ஹிந்தி திணிப்போ, வெறியோ இல்லை’ என தெரிவித்தார்.