தருமபுரம் ஆதீன மடத்தில் பாரம்பரியமான பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு தமிழக அரசு தடை விதித்ததற்கு பக்தர்கள், இந்து முன்னணி உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து வேறு வழியின்றி தமிழக அரசு பின் வாங்கியது. அனுமதி அளித்தது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிய பரமாச்சாரிய சுவாமிகள், ‘தருமபுரம் ஆதீன பட்டினப் பிரவேச நிகழ்ச்சியை தமிழகமே உற்று நோக்குகிறது. முதல்வர் பட்டினப் பிரவேசத்திற்கு அனுமதி அளித்ததற்கு நன்றி. இது மக்களுக்கும் சைவத்திற்கு ஒரு இனிப்பான செய்தி. என்னை மிரட்டிய ஆளுங்கட்சியை சேர்ந்த 2 பேரை அவர்கள் கட்சியில் இருந்து தூக்கட்டும். அமைச்சர்கள் குறித்து மன்னார்குடி ஜீயர் தெரியாமல் சொல்லிவிட்டார். இனிமேல் அப்படி சொல்லமாட்டார்’ என கூறினார். அப்போது பா.ஜ.க மற்றும் ஹிந்து மக்கள் கட்சியின் குரலாக நீங்கள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுகிறதே என ஒரு நிருபர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், ‛நீங்கள் அப்படி நினைத்தால் நினைத்துக் கொள்ளுங்கள்’ என தெரிவித்தார்.