தாய்மொழிக் கல்வி

தேசியக் கல்விக் கொள்கை 2020ன் படி, 3ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு அவர்களின் சொந்த தாய்மொழியில் கற்பித்தால், அவர்கள் சிறந்த புரிதலை வளர்ப்பது மட்டுமல்லாமல், பள்ளிகளில் அவர்களின் வருகையும் அதிகரிக்கும். இதைக் கருத்தில் கொண்டு மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் இது முறையாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய ஜார்க்கண்ட் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதன்படி, ஜார்கண்டில் உள்ள பழங்குடியின மாணவர்கள் தங்கள் சொந்த மொழியில் பாடங்களை கற்க உள்ளனர். அங்கு, முண்டாரி, காடியா, குடுக், சந்தாலி, நாக்புரி பஞ்சபர்கானியா, குர்மலி , கோர்தா என பல பழங்குடியின மொழிகள் உள்ளன. இதனால், ஜார்க்கண்டில் பழங்குடியினர் அதிகம் உள்ள ஆறு மாவட்டங்களில் உள்ள 250 அரசுப் பள்ளிகளில் 3ம் வகுப்பு வரையிலான தொடக்கப் பிரிவுகளில் படிக்கும் குழந்தைகளுக்கு அவர்களின் சொந்த பழங்குடியினர் மொழியில் பாடம் கற்பிக்கப்படும். 70 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட பழங்குடி மொழியைப் பேசும் பள்ளிகளில் அந்த மொழியில் பாடம் கற்பிக்கப்படும். சந்தால் பர்கானாவில் உள்ள பள்ளிகளில் ‘ஒல்சிகி’ மொழியில் கற்பித்தல் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. அதற்காக தனி பாடப் புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளது.