மென் திறன் பயிற்சி என்றால்…
எந்த துறையாயிருந்தாலும் அதில் ஒருவர் வெற்றிகாண அந்த துறை சார்ந்த அறிவும் திறனும் மட்டும் போதாது. பொதுவான பண்புகளான சக ஊழியர்களுடன் சமுகமாக கலந்து பழகுதல், குழுவாக பணிபுரிதல், சவால்களைச் சந்திக்கும் மனோபாவம், ஆளுமைத் திறன், ஊக்கம் உடைமை என்பன தேவை. அவற்றையே மென் திறன்கள் என்கிறோம்.
நீங்கள் பயிற்சி அளிக்கும் பல பயிற்சிப் பாடங்களுக்குள் உங்களுக்கு விருப்பமானப் பாடத்திட்டம் எது?
என்.எல்.பி முறையில் ஆழ்மனப் பயிற்சி அளித்தல் எனக்கு மிகவும் பிடித்த பாடத் திட்டம்; இரண்டாவது ‘ஆனந்தம், ஐஸ்வர்யம், அமோகம்’ என்று தலைப்பிட்டுள்ள செல்வச் செழிப்பான சிந்தனையைக் கொண்டு வருவதன் மூலம் செல்வப் பெருக்கத்துக்கான வழிமுறையை சோல்லித் தருதல் பிடித்தமானது.
NLP பற்றி சில வரிகள்..
NLP என்பது Neuro-Linguistic Program என்பதன் சுருக்கம்.
என்.எல்.பி என்ற மனோதத்துவ முறை அமெரிக்காவில் 1970களில் உருவானது.
புலன் பதிவுகளே அனுபவத்தின் அடிப்படை. புலன் பதிவுகளின் முறையை குறிப்பிட்ட முறையில் மாற்றுவதன் மூலம் வாழ்க்கையின் அனுபவங்களை மாற்றலாம் என்று என்.எல்.பி கண்டுபிடித்துள்ளது.
ஆழ்மன ஆற்றலை முறையாகவும், முழுமையாகவும் பயன்படுத்தும் உத்திகளின் தொகுப்பு என்.எல்.பி எனலாம்.
இத்தகைய சுய முன்னேற்றம் போன்றவை வெளி நாட்டிலிருந்துதான் இறக்குமதி ஆகின்றனவே, பாரத நாட்டு சிந்தனை மரபில் சுயமுன்னேற்றம் பற்றிய சிந்தனையே கிடையாதா?
நல்ல கேள்வி. இதற்கு சட்டென பதில் சொல்ல வேண்டுமானல் ‘நம் நாட்டில் சுய முன்னேற்றப் பயிற்சிகள் என்று கிடையாது. காரணம் நம் பற்றிய சிந்தனை மரபு வேறு; மேற்கத்திய சிந்தனை மரபு வேறு.
பாரத நாட்டில் ஆன்மீகமே அடி நாதம். “தன்னுள் உறையும் இறைமையை உணர்வதே வாழ்வின் நோக்கம்“ என்றே நமக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டு வந்தது.
தன்னை மற, பிறரை நினை,”, விருந்தினரை வானோர் எனப் போற்று’ ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பதே நமக்கு இயல்பாக போதிக்கப்பட்டு வந்தவைகள்.
தன் சமுதாய முன்னேற்றத்தின் மூலமே சுயமுன்னேறம் காண்பதே நம் நாட்டு மரபு. பிறரை தள்ளிவிட்டு தன்னை முன்னிறுத்துவது இழி செயல் என்றே வள்ளுவரும் வள்ளலாரும் போதிக்கின்றனர்.
மேற்கத்திய நாட்டினரின் குறிப்பாக, அமெரிக்கர்களின் அணுகுமுறை நேர் மாறானது. அமெரிக்கா நாடு உருவானது எப்படி? ஆதிக்க மதம் பூர்வகுடிகளை அழித்து உருவானது. அமெரிக்கா ஒரு காலனி நாடு. பிறரை விட தன்னை முன்னிறுத்தி முன்னேற வேண்டும் என்ற முனைப்பு இயல்பிலேயே ஊறி விடும்.
அதன் தொடர்ச்சியாக சுயலாபம் அளிக்கும் சுய முன்னேற்றப் பயிற்சிமுறை என்று பரிணமித்தது.
அதனால் அங்கிருந்து நாமும் இந்த நவீன விஞ்ஞான உலகில் இறக்குமதி செய்து கொண்டிருகிறோம்.
என்னதான் நிர்வாகத் திறன், மேலாண்மைத் திறன் ஆகியவைப் பெற இத்தகைய சுயமுன்னேற்றப் பயிற்சி வகுப்புகள் வழிவகை செய்தாலும், மேற்கத்தியர்கள் கூட தங்களுக்கான மன அமைதியையும் வாழ்க்கையின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளவும் பகவத் கீதையும் உபநிஷத்துகளையும் யோகசூத்திரங்களையும் நாடுகின்றனர்.
நம் முன்னோர்கள் வாழ்க்கையை முழு வீச்சில் வாழ்ந்து, ஆண்டு அனுபவித்து, உணர்ந்து, நல்லது கெட்டது எவை எவை என்ற தேடலில் அகமுக ஆராச்சியின் உச்சத்தை எட்டி, வாழ்க்கையின் மெய்பொருள் காணும் அறிவைப் பெற்றனர்.
உலகின் குரு பாரதம் என்று உலகம் உணரத் தொடங்கி விட்டது.
தன்னைப் பற்றி
தன்னை நம்பாதவனே நாத்திகவாதி என்றார் சுவாமி விவேகானந்தர். அந்த ஆரம்ப நாட்களில் தன்னம்பிக்கை குறைவானவனாகத்தான் இருந்தேன் . கல்லூரி நாட்களில் ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு வந்த பின்னே தேசியத் தலைவர்களைப் பற்றி நம் நாடு, உலகின் குருவா இருந்த உன்னத நாடு என்ற பெருமிதம் மனதிலே தோன்ற ஆரம்பித்தது. அத்தகைய உயர்ந்த நாட்டின் பிரஜை என்ற எண்ணமே என்னுள் தெம்பைக் கொடுத்தது. அதே மனப்பான்மையை மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என்ற உந்துதலால் மென் திறன் பயிற்றுனரானேன்.”
யாருக்கு வேண்டும் இது?
- கல்லூரிப் படிப்பின் இறுதி ஆண்டினை அடுத்து வேலையில் சேர தயார் செய்து கொண்டிருப்பவர்கள்.
- சேர்ந்த பணியில் பதவி உயர்விற்கு, தலைமைப் பொறுப்பிற்கு தயாராக வேண்டியவர்கள்.
- அயல் நாட்டு பணிவில் உள்ளவர்கள், பல கலாசாரப் பின்னணி கொண்ட பன்னாட்டு நிறுவனங்களின் குழுக்களின் மேலாளர்கள்.
- எந்த நிலையிலும் மன அழுத்தத்தை சமாளிக்க நினைப்பவர்கள்.
- சுயதொழில் முனைவோர், ஏற்றுக்கொண்ட துறையில் இலக்கை அடைய வெற்றி காண நினைப்போர், என்று பலரும் மென்திறன் பயிற்சி வகுப்புகளில் பங்கு கொள்கின்றனர்.