தி.மு.கவின் மின்வெட்டு ஊழல்

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மின் வெட்டு நிலவுகிறது. பல இடங்களில் இரண்டு முதல் எட்டு மணி நேரம் மின் வெட்டு நிலவுகிறது. இதுகுறித்து பாரதிய மஸ்துார் சங்க மின் வாரிய பிரிவின் அகில இந்திய தலைவர் முரளி கிருஷ்ணன் கூறுகையில், ‘மத்திய மின் தொகுப்பில் இருந்து மின்சாரம் கிடைக்கவில்லை என்பது முற்றிலும் தவறு. தமிழக மின் உற்பத்தி சில நாட்களாகவே திட்டமிட்டு தடை செய்யப்படுகிறது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள நான்கு அலகுகளில் மூன்றில் உற்பத்தியை நிறுத்தப்பட்டுள்ளது. நிலக்கரி நிரவல், பராமரிப்பு பணி என்று காரணம் சொல்லபடுகிறது. ஆனால், திட்டமிட்டே மின் உற்பத்தியை நிறுத்தினர் என்பது தான் உண்மை. காலை, மதியம், மாலை என விட்டு விட்டு மின் உற்பத்தி அலகை இயங்கச் செய்வதும் நிறுத்துவதுமாக இருந்தனர். இதனால், பல கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டு இருக்கும் மின் அலகுகள் செயல்படாமல் போகவும் வாய்ப்புள்ளன.

இப்படி செய்து மின் உற்பத்தி குறைந்து, பற்றாக்குறை ஏற்படுத்தப்பட்டால்தான் அவர்களால் தனியாரிடம் மின் கொள்முதல் செய்ய முடியும். பற்றாக்குறை பிரச்னையை மேலும் மோசமாக்குவதற்காகவே அவசர அவசரமாக ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு கொடுத்துள்ளனர். இந்த புதிய இணைப்புகளால் மேலும் 2,000 மெகாவாட் மின்சாரம் தேவை ஏற்படும். ஏற்கனவே கோடையில் மின் தேவையை சமாளிக்க, 3,000 மெகாவாட் வெளியில் இருந்து வாங்கியாக வேண்டும் என்று மின் வாரிய தலைவர் அறிவித்துள்ளார்.

இதனால், மொத்தமாக 5,000 மெகாவாட் வெளியில் இருந்து கொள்முதல் செய்ய ஏற்பாடு நடக்கிறது. வெளியில் இருந்து மின் வாரியமே நேரடியாக மின்சாரத்தை வாங்கலாம். ஆனால், ஒரு சில மாதங்களுக்கு முன் அந்த உரிமம் கோவையைச் சேர்ந்த பிரமுகர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர், ஆளுங்கட்சிக்கு நெருக்கமானவராக தெரிகிறார். உள்ளூரில் யூனிட்டுக்கு 2.50 காசுக்கு உற்பத்தியாகும் மின்சாரத்திற்கு பற்றாக்குறை ஏற்படுத்தி, வெளியில் இருந்து யூனிட்டுக்கு 20 ரூபாய் வரை கொடுத்து வாங்க திட்டம் போடுகின்றனர். ஏற்கனவே, உதய் மின் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த முயன்றபோது மின் வாரியத்தை தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது என்று சொல்லி எதிர்த்தது தி.மு.க. ஆனால் தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் தனியார் வாயிலாக மின்சாரம் வாங்குகிறது. இப்படி எல்லா விஷயங்களிலும் தி.மு.க இரட்டை வேடம் போடுகிறது’ என்று கூறினார்.