மேற்குவங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் உள்ள ஹன்ஸ்காலி பகுதியைச் சேர்ந்த 14 வயது பள்ளிச் சிறுமி உயிரிழந்தார். ஏப்ரல் 4ம் தேதி இரவு திருணமூல் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாயத்து தலைவரின் மகன் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள சென்றார் அந்த சிறுமி, மறுநாள் அதிகாலையில் உடல்நலம் குன்றிய நிலையில் வீடு திரும்பினார். மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதே நாளில் அவசர கதியில் அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது. தங்களது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக சிறுமியின் குடும்பத்தார் புகார் அளித்தனர். சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என ஊடகங்களில் செய்தி வெளியானது. இதற்கு பதில் அளித்த அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி, ‛என்ன நடந்தது என்று போலீசுக்கு சரியாகத் தெரியவில்லை. பாலியல் வன்கொடுமை என ஊடகங்கள் சொல்கின்றன. அந்த சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டாரா, கர்ப்பமாக இருந்தாரா, காதல் விவகாரமா என தெரியவில்லை. இதை ஒரு காதல் விவகாரம் என்று நான் கேள்விப்பட்டேன்’ என்று பொறுப்பற்ற முறையில் பதில் அளித்தார். முதல்வரின் இக்கருத்து சர்ச்சையானது. பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்தது. இதனை விசாரிக்க பா.ஜ.க சார்பில் உண்மை கண்டறியும் குழுவை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அமைத்துள்ளார். 5 பேர் கொண்ட அக்குழுவில், தேசிய துணை தலைவர் ரேக்கா வர்மா, உத்தரப் பிரதேச அமைச்சர் பேபி ராணி மௌரியா, மேற்குவங்க எம்.எல்.ஏ ஸ்ரீரூபா மித்ரா சௌத்ரி, தமிழக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், குஷ்பு, ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.