மூத்த திருநங்கைகள் உரிமை ஆர்வலரான ஊர்வசி காந்தி, தேசிய கலாச்சார நிதியத்தின் கவுன்சில் மற்றும் செயற்குழுவின் அதிகாரப்பூர்வமற்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். முதல்முறையாக பாரத அரசின் கலாச்சார அமைச்சகம், தேசிய கலாச்சார நிதியத்தின் கவுன்சில் மற்றும் செயற்குழு உறுப்பினராக திருநங்கை ஒருவரை நியமித்துள்ளது. அம்புஜா நியோடியா குழுமத்தின் தலைவர் ஹர்ஷவர்தன் நியோடியா, மூர்த்தி அறக்கட்டளையின் தலைவர் சுதா மூர்த்தி போன்ற மதிப்புமிக்க நபர்களுடன் அவர் இதில் உறுப்பினராக திகழ்வார்.
திருநங்கைகள் உரிமை ஆர்வலரான ஊர்வசி காந்தி, தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டியில் பிறந்தார். சிறு வயதிலேயே தனது வீட்டை விட்டு வெளியேறினார். தமிழகத்தில் உள்ள கிராமப்புற திருநங்கைகளுக்காக இருபது வருடங்களுக்கும் மேலாக உழைத்து வருகிறார். அவர்கள் சொத்து உரிமைகள், தங்குமிடம், சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளைப் பெறுவதற்கும் பாடுபட்டு வருகிறார். தமிழகத்தில் உள்ள பழங்குடி மாற்றுப் பாலின சமூகங்களின் பாரம்பரியம் மற்றும் ஆன்மீக இடங்களைப் பாதுகாக்க உழைக்கும் ஒரு சில நபர்களில் ஊர்வசி காந்தியும் ஒருவர்.
திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டம், 2019ன் கீழ் சொத்து வாரிசு உரிமையைப் பெற்ற முதல் நபரும் இவர்தான். கடந்த ஏழு ஆண்டுகளாக, ஊர்வசி காந்தி, சிருஷ்டி மதுரை எல்.ஜி.பி.டி மாணவர் தன்னார்வ இயக்கத்துடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறார்.
கடந்த காலங்களில், மதுரைக்கு வருகை தந்த பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் ஆகியோருடன் திருநங்கைகளின் உரிமைகள் மற்றும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவது குறித்து நேரடியாக விவாதித்த வெகு சில நபர்களில் இவரும் ஒருவர். தமிழகத்தில் உள்ள நூற்றுக்கணக்கான திருநங்கைகளுக்கு பயனளிக்கும் வணிக மாதிரியை இவர் உருவாக்கியுள்ளார். நூற்றுக்கணக்கான ஆதரவற்ற மாற்றுப் பாலினத்தவர்களைத் தன் வீட்டில் தங்கவைத்து அவர்களுக்கு வழிகாட்டி வருகிறார்.