பாரதம் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணை, எரிவாயுவை வாங்கக்கூடாது என ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றன. இந்நிலையில், முதல் ஐ.யு.எஸ்.எப்.எப் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பாரத வெளிவிவகாரத்துறை அமைச்சர் டாக்டர். எஸ் ஜெய்சங்கர், பிரிட்டிஷ் வெளியுறவு மந்திரி லிஸ் ட்ரஸ் முன்னிலையில் ஐரோப்பிய நாடுகளின் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். “ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து ஒரு மாதத்திற்கு முன்பு வாங்கியதைவிட தற்போது 15 சதவீதம் அதிக எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கியுள்ளது. ரஷ்யாவிலிருந்து பெரும்பாலான எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்குபவர்களாக ஐரோப்பியர்கள் உள்ளனர். எங்கள் தேவையில் பெரும்பகுதியை நாங்கள் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பெறுகிறோம். அமெரிக்காவிலிருந்து சுமார் 8 சதவீதமும் ரஷ்யாவிலிருந்து ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவும் மட்டுமே வாங்குகிறோம். எண்ணெய் விலை உயரும்போது, நாடுகள் தங்கள் மக்களின் நலனுக்காக நல்ல ஒப்பந்தங்களைத் தேடுவது இயல்பானது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களில் நாங்கள் இருக்க மாட்டோம்” என பேசினார். இது குறித்து பேசிய பிரிட்டன் வெளியுறவுத்துறை செயலாளர் எலிசபெத் ட்ரஸ், “பாரதம்ஒரு இறையாண்மை கொண்ட நாடு, அது என்ன செய்ய வேண்டும் என்று நான் சொல்லப் போவதில்லை” என கூறினார்.