வாட்ஸப்பால் சாதித்த வாலிபர் அணி

சிவகங்கை மாவட்டம் கண்டாங்கிபட்டி ஊராட்சியை சார்ந்த கூட்டுறவுப்பட்டியில் 500 குடும்பங்கள் 850க்கும் மேலான மக்கள் வசிக்கிறார்கள்.

ஒரு காலத்தில் செழித்திருந்த விவசாயம் நாளடைவில் பொய்த்து போனது. நிலத்தடி நீர்மட்டம் பலநூறு அடிக்கும் கீழே சென்றுவிட்டது. இங்கு ஊராட்சி சார்பில் போடப்பட்ட ஆறு ஆழ்குழாய்களுக்கான மின் மோட்டார்கள் பழுதானது. குடிப்பதற்கும் புழங்குவதற்கும் லாரி தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டியதாயிற்று. கூட்டுறவுப்பட்டியில் தண்ணீர் பிரச்சினை விஸ்வரூபம் ஆனது. கிராம மக்கள் மின்மோட்டார்களை பழுது நீக்கவும் தண்ணீர் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பத்து முறைகளுக்கு மேல் மனு கொடுத்தனர். எந்த நடவடிக்கைகளும்      

எடுக்கப்படவில்லை! பஸ் மறியலில் ஈடுபட்டனர். மறியல் செய்தவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து அபராதமும் விதிக்கப்பட்டது. கிராமத்தில் நிதி வசூல் செய்து அபராத தொகையை செலுத்தினார்கள்.

சரி, இனி அதிகாரிகளை நம்பி பிரயோஜனமில்லை,  நம்ம கிராமத்துக்கு தேவையான அடிப்படை வசதிகளை நாமே செய்து கொள்ளலாம்” என்று கிராம மக்கள் முடிவெடுத்தனர். கூட்டுறவுப்பட்டியில் வீட்டிற்கொருவர் (இளைஞர்கள்) துபாய், சௌதி அரேபியா, மஸ்கட், சிங்கப்பூர், மலேசியா, கத்தார் போன்ற நாடுகளில் (250 க்கும் மேலானவர்கள்) வேலை பார்க்கிறார்கள். அதுவும், பி.இ. சிவில் இன்ஜினியரிங் படித்துச் சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இளைஞர்களும் கிராமத்தில் செல்போன்  வைத்திருப்பவர்களும், நம் கிராம வளர்ச்சிக்காக நாம் என்று வாட்ஸ் அப் குரூப்பில் பல நூறு பேர்களாக ஒருங்கிணைந்துள்ளார்கள். இதில் கிராம தேவைகளை பதிவிடுகிறார்கள். தினமும் பேசி கலந்துரையாடுகிறார்கள். தேவையான பணத்துடன் கிராம பிரச்சினைகள் பூர்த்தியாகி செயலாக்கம் பெறுகின்றன.

விவரம் தெரிந்து கொள்ளுவதற்காகவே நாம் கூட்டுறவுப்பட்டிக்கு சென்று மக்களிடம் பேசியதிலிருந்து:

கருப்பாயி, 68: கிராமத்து இளந்தாரிகள் தண்ணீர் பிரச்சனையை தீர்த்து, ஊருக்குள் டேங்க் வைச்சு கொண்டிருந்தாங்க. முன்னால இலவசமாக தண்ணி எடுத்துகிட்டோம். இப்ப ஒரு குடம் தண்ணீர் பிடிக்க ஒரு ரூபாய் வசூல் செய்றாக. ஒரு குடும்பத்துக்கு இருபது குடம் மட்டும்தான்! இதனால தண்ணிப் பிரச்சனை இல்லை!

ராஜேஸ்வரி, 51: இந்த ஊரின் சிறப்பு என்னான்னா திருவிழா என்றால் எல்லோரும்       சேர்ந்து கொண்டாடுவோம்! இங்க ஜாதி பிரச்சனையே இருக்காது. கதிர் அறுத்ததும் மொதல்ல காலனி காரங்களுக்குத்தான் கொடுப்போம். அவுங்க நம்மள சார்ந்து இருக்காங்க… நம்ம அவுங்கல சார்ந்து இருக்கோம். நல்லது, கெட்டது எல்லாமே ஒருத்தருக்கொருத்தர் ஆதரவா இருப்பதுதான்!

 

ராஜ்குமார் 37: 1997ல் எங்க கிராமத்தில் உள்ள இளைஞர்கள் ஒன்று சேர்ந்து புறம்போக்கு இடம் பள்ளமாக இருந்தது. நாங்களே மாட்டு வண்டி மூலமாக மண் எடுத்து வந்து பள்ளத்தை நிரப்பினோம். அடுத்து மயானப் பகுதியில் கள்ளிச்செடிகளை வெட்டி கண்மாயிலிருந்து மண் எடுத்து வந்து அந்த இடத்தையும் செம்மினோம்.  அப்படி கிராமத்திற்காக, பொது விஷயங்களில் ஈடுபடுவது இருபது வருஷத்திற்கு முன்பாகவே தொடங்கிவிட்டோம்.