ரஷ்யாவின் நவீன ஏவுகணை தாக்குதல்

உக்ரைன் மீதான ரஷ்ய ராணுவ நடவடிக்கையை வேகப்படுத்தும் விதமாக, உக்ரைனில் உள்ள ராணுவ ஆயுத கிடங்கை தகர்க்க அதிநவீன ‘ஹைப்பர்சோனிக்’ ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த நவீன வகை ஏவுகணையை நேரடியாக களத்தில் ரஷ்ய படையினர் பயன்படுத்துவது இதுவே முதல்முறை. கடந்த 2018ல் இவ்வகை ஏவுகணையை ரஷ்யா அறிமுகம் செய்தது. இந்த ஏவுகணை ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் பயணிக்கும். இவற்றை மிக் 31 மற்றும் டியு 22 எம் 3 ஆகிய விமானங்களில் இருந்து மட்டுமே ஏவ முடியும். இதை, எந்த ஏவுகணை தகர்ப்பு அமைப்புகளாலும் தடுக்கவோ வீழ்த்தவோ முடியாது. இத்தாக்குதல் குறித்து ரஷ்ய ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உக்ரைனின் டெலியாடின் பகுதியில் சுரங்கத்தில் கட்டமைக்கப்பட்டிருந்த ஆயுதக் கிடங்கை ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை வீசி தகர்த்துள்ளதாகவும், அதில் உக்ரைன் சேமித்து வைத்துள்ள பல அதிநவீன ஆயுதங்கள் அழிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், உக்ரைனின் முக்கிய ரேடியோ அலைவரிசை தொடர்பு கட்டமைப்பையும் ரஷ்யா தகர்த்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.