நாகாலாந்தின் ஒரே ஒரு மாநிலங்களவை தொகுதிக்கான தேர்தலுக்கு பா.ஜ.க தனது நாகாலாந்து பிரிவு மகிளா மோர்ச்சா தலைவர் எஸ். பாங்னான் கொன்யாக்கை வேட்பாளராக அறிவித்துள்ளது. நாகாலாந்தின் ஆளும் கட்சி கூட்டணியில் பா.ஜ.க உள்ளதால் இத்தேர்தலில் அனேகமாக பாங்னான் தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. மேலும் காங்கிரஸ், என்.பி.பி போன்ற எதிர்க்கட்சிகளுக்கு நாகாலாந்து சட்டமன்றத்தில் ஒரு எம்எல்ஏகூட இல்லை. நாகாலாந்து, உயர் கல்வி விகிதத்துடன் முற்போக்கான மாநிலமாக அறியப்பட்டாலும் 1963ல் அது மாநிலமாக அறிவிக்கப்பட்டதில் இருந்து பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினதாக தேர்ந்தெடுக்கப்படவில்லை. 1970களில் ரானோ ஷைசா என்ற பெண்மணி மட்டுமே எமர்ஜென்சி அலை காரணமாக நாகாலாந்து எம்.பி.யாக மக்களவைக்கு அனுப்பப்பட்டார். நாகாலாந்தில் பெண்களை விட ஆண்களுக்குதான் சமூக அரசியல் அமைப்புகள் சாதகமாக உள்ளது. வாக்காளர்களும் ஆண் வேட்பாளர்களுக்கே அதிகம் வாக்களிக்கின்றனர். இந்நிலையில், பெண்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ள பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமீத் ஷா, பா.ஜ.க தலைவர் ஜே.பி நட்டா ஆகியோருக்கு பாங்னான் கொன்யாக் நன்றி தெரிவித்துள்ளார்.