ஓ.ஐ.சி’க்கு வெளியுறவுத்துறை கண்டனம்

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் மார்ச் 22, 23ல் நடைபெறவிருக்கும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (ஓ.ஐ.சி) 48வது வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க ஹுரியத் மாநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாரதத்தின் உள்விவகாரங்களில் ஓ.ஐ.சி அமைப்பை சேர்ந்த நாடுகள் தலையிட வேண்டாம் என வெளியுறவுத்துறை பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையிலும் பாகிஸ்தானின் தூண்டுதலின் பேரில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் விவகாரம், சட்டப்பிரிவு 370 நீக்கம் போன்றவற்றை குறித்து விவாதிக்கவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதகத் தெரிகிறது. ‘ஓ.ஐ.சி தனது முக்கியமான வளர்ச்சி நடவடிக்கைகளில் கவனம் செலுத்தாமல், ஒரு உறுப்பு நாட்டின் அரசியல் நிகழ்ச்சி நிரலால் தொடர்ந்து வழிநடத்தப்படுவது வருத்தமளிக்கிறது’ என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார். ஜம்முவில் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வதில் ஹுரியத் மாநாட்டுத் தலைவர்கள் ஈடுபட்டதால் அவர்களின் அலுவலகங்களில் சோதனை செய்யப்பட்டு ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு ஹுரியத் அமைப்பின் அனைத்து பிரிவுகளையும் தடை செய்வதை குறித்து தீவிரமாக சிந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.