மக்களுக்கு ஏமாற்றமே மிச்சம்

தமிழக பட்ஜெட் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, ‘தமிழக பட்ஜெட் மக்களை ஏமாற்றும் வெத்துவேட்டு அறிக்கை. அ.தி.மு.க ஆட்சியை விட்டு சென்ற போது ரூ. 4.85 லட்சம் கோடி கடன் இருந்தது. தற்போதைய குறுகிய கால தி.மு.க., ஆட்சியில் ரூ. 1.08 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளனர். ஆனால், முக்கிய திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. நடப்பாண்டு மேலும் கடன் வாங்க திட்டமிட்டுள்ளனர். அ.தி.மு.க., ஆட்சியில் கடன் இருந்தாலும், மூலதன செலவுகளுக்காகவே கடன் பெறப்பட்டது. கொரோனாவால் கடுமையான நிதிச்சுமை, வருமானம் குறைவு, தொழிற்சாலைகள் மூடல் போன்றவற்றால் அரசுக்கு வருமானம் கிடைக்கவில்லை. ஆனால், தி.மு.க., ஆட்சியமைக்கும் நேரத்தில் இயல்பு நிலை திரும்பியது. அரசின் வருமானம் அதிகரித்தது. வருமானம் அதிகரித்தால் கடன் குறைய வேண்டும். ஆனால், தற்போது கடன் அதிகரித்துள்ளது. மகளிர் உரிமை தொகை, கல்விக்கடன் தள்ளுபடி அறிவிப்புகள் எதுவும் இல்லை, மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்த போதும் தி.மு.க அரசு விலையை குறைக்கவில்லை. கட்டுமான பொருட்களின் விலை அதிகரித்துவிட்டது. மொத்தத்தில் மக்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது’ என்றார்.