ஹோலி பண்டிகை ஹிந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு வண்ணமயமான பண்டிகை. பனி காலத்திற்கு விடையளித்து, வெயில் காலத்திற்கு வரவேற்பு வழங்கும் காலத்தில் கொண்டாடப்படும் பண்டிகை இது. முன்பெல்லாம் ஹோலி பண்டிகை வட பாரதத்தில் மட்டுமே கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால், தற்போது பாரதம் முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் பல்வேறு வண்ண பொடிகளைத் தூவி, வண்ணங்கள் கலந்த நீரை தெளித்து விளையாடி, இனிப்புகளை பரிமாறி மக்கள் மகிழ்வார்கள். இந்த பண்டிகை அரங்க பஞ்சமி என்றும் அழைக்கப்படுகிறது.
ஹோலிக்கு முதல் நாள் ஹோலிகா தகனம் என்ற நிகழ்ச்சி நடைப்பெறும் அன்றைய இரவில் மரக்கட்டைகளை வைத்து எரியூட்டி அக்னி தேவனுக்கு தேங்காயுடன் தாம்பூலம் வைத்து இனிப்பு பண்டங்களுடன் பூஜை செய்யப்படுகிறது. ஹோலிகா தகனமானதை ஒட்டியும், பக்த பிரகலாதன் உயிர்பெற்றெழுந்த மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் வகையில் பக்தர்கள் ஹோலி, ஹோலி என்று உற்சாக குரல் எழுப்புவார்கள். தேங்காயுடன் பூஜை செய்த இனிப்புகளையும் அக்னியில் போடுவார்கள். மறுநாள் மக்கள் ஒருவருக்கு ஒருவர் வண்ணப் பொடிகளை தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.
ஹோலி பண்டிகையானது கிருஷ்ண பகவான் கோபியர்களுடன் விளையாடிய நாள் என்றும், இந்த பண்டிகை ராதாவும் கிருஷ்ணரும் விளையாடிய நாளென்றும் நம்பப்படுகிறது. கிருஷ்ணர் ராதை காதலித்து வந்த போது, கிருஷ்ணர் தான் கருப்பாக இருப்பதாகவும், ராதை சற்று நல்ல நிறத்துடன் இருப்பதாக வருத்தப்பட்டாராம். அப்போது ராதையை அழைத்த கிருஷ்ணரின் தாய், ராதாவுக்கு வண்ணப் பொடிகளை தடவி அவரை சற்று கருப்பாக கண்ணன் முன் காட்டியதாகவும் கூறப்படுகிறது.
சர்வ வல்லமையுள்ள கடவுளின் சக்தியை நீங்கள் உண்மையாகவே நம்பினால், உங்களை தோற்கடிக்கவோ, உங்களுக்கு தீங்கு விளைவிக்கவோ முடியாது என்ற கருத்தை இந்நாள் நிரூபிக்கிறது. ஹோலி பண்டிகையின்போது ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு மறைந்து அனைவரும் ஒன்று என்ற மகத்துவம் ஓங்கி நிற்பது விழாவின் சிறப்பு.
இந்த வண்ணங்கள் வேப்பிலை, குங்குமம், மஞ்சள், வில்வம் போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட இயற்கை வண்ணகளால் தயாரிக்கப்படுவதால் மிகுந்த மருத்துவ நன்மைகள் கிடைக்கிறது. ஆனால், தற்காலத்தில் வியாபாரம் நோக்கத்திற்காக சாயம், ரசாயனங்கள் கலந்த செயற்கை வண்ணங்கள் அதிகமாக விற்கப்படுகின்றன. இதனால் சுற்றுசுழலுக்கும் உடல்நலத்திற்கும் கேடு ஏற்படுகிறது. அனைவரும் முடிந்தவரை இயற்கையான வண்ண பொடிகளை கொண்டு ஹோலியை கொண்டாடுவோம்.