விஜய் மல்லையா, நிரவ் மோடி என பஞ்சாப் நேஷனல் வங்கியில் அடுத்தடுத்து பலர் பண மோசடிகள் செய்துள்ளனர். இந்த வரிசையில், தற்போது உள்கட்டமைப்பு குத்தகை மற்றும் நிதி நிறுவனமான ஐ.எல் & எப்.எஸ் நிறுவனத்தின் தமிழக ஐ.எல் & எப்.எஸ் தமிழ்நாடு பவர் நிறுவனமும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்லது. இந்நிறுவனம், பஞ்சாப் நேஷனல் வங்கியில் 2,060 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்துள்ளதாக ரிசர்வ் வங்கியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஐ.எல் & எப்.எஸ் தமிழ்நாடு பவர் என்பது தமிழ் நாட்டின் கடலூரில் அனல் மின் திட்டங்களை செயல்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு சிறப்பு நிறுவனமாகும். முன்னதாக பஞ்சாப் & சிந்த் வங்கி கடந்த பிப்ரவரி 15 அன்று ஐ.எல் & எப்.எஸ் தமிழ்நாடு பவரின் நிலுவைத்தொகையான ரூ. 148 கோடி வாரக்கடனாக இருப்பதாக ரிசர்வ் வங்கியிடம் தெரிவித்தது. மேலும், சில தினங்களுக்கு முன்பு பஞ்சாப் வங்கியின் தலைமை மேலாளர் உதவியுடன் 400 கோடி ரூபாய் கடன் மோசடி செய்ததாக உயர் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டார். இதில் பலருக்கும் தொடர்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.