முடங்கும் உலகம்

நமது உலகப் பொருளாதாரம் அனைத்துமே ரஷ்ய உக்ரைன் போரால் இன்று அதல பாதாளத்தில் வீழ்ந்து கொண்டுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து உலகத்தில் பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பணவீக்கத்தால் அங்கு விலைவாசிகள் 40 ஆண்டுகள் இல்லாத வகையில் உயர்ந்துள்ளன. இது தொடர்ந்தால் அடுத்த ஓரிரு மாதங்களில் அமெரிக்க மக்கள் சாலைகளில் இறங்கி போராடும் நிலை ஏற்படும் என அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளும் பொருளாதார சீர்குலைவுகளால் செய்வதறியாது விழிக்கின்றன. அங்கு இப்போதே எரிபொருள் தட்டுப்பாடு ஆரம்பித்துவிட்டது. ஜோ பைடனின் தெளிவில்லாத வெளியுறவுக் கொள்கைகள், உக்ரைன் அதிபரின் முட்டாள்தனம், ஐரோப்பிய நாடுகளின் தவறுகள், ரஷ்யாவின் பிடிவாதம் போன்றவற்றால் உலக மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி வருகிறது. வளர்ந்த நாடுகளே இப்படியென்றால் சிறிய நாடுகளின் நிலை?

நமது அண்டை நாடான இலங்கையில் பெட்ரோலின் விலை 50 ரூபாயும் டீசலின் விலை 75 ரூபாயும் அதிகரித்துள்ளது. இலங்கையில் 50 ரூபாய்க்கு பெட்ரோலும் 75 ரூபாய்க்கு டீசலும் விற்கப்படவில்லை. தற்போதுள்ள விலையின் மீது மேலும் ரூ. 50ம், 75ம் ஏற்றப்பட்டுள்ளது. இன்று அங்கு பெட்ரோல் விலை ரூ. 254, டீசல் விலை ரூ. 176. மேலும் உணவு பொருள் தடுப்பாடு, மின்சார தட்டுப்பாடுகளால் அந்நாடு ஸ்தம்பித்துள்ளது. பாரதம் மட்டுமே உதவுகிறது. சீனாவோ மற்ற நாடுகளோ வேடிக்கை மட்டுமே பார்க்கின்றன. உலகின் பல சிறிய நாடுகளின் நிலையும் இதுதான். பெட்ரோல் டீசல் விலை ஒரு ரூபாய் ஏறினாலே மோடியை திட்டித் தீர்க்கும் திராவிட கும்பலும் இடதுசாரிகளும் இதற்கு என்ன சொல்வார்கள்?

கொரோனா நெருக்கடியில் இருந்து மீண்டுவரும் உலகத்திற்கு, அடுத்த அடியை இந்த போரும் பொருளாதார நெருக்கடியும் தந்துள்ளது. இந்த நெருப்பு உலகம் முழுவதும் எரிகிறது. நமது அண்டை நாடுகளை பதம் பார்க்கத் துவங்கிவிட்டது. இது தொடர்ந்தால் நமது நாடும் இதில் இருந்து தப்பிக்க வழியில்லை. நமது உள்நாட்டு உணவு உற்பத்தி நமக்கு கைகொடுக்கலாம் எனினும் கச்சா எண்ணை, மின்சாரமும் விலை ஏற்றங்கள் அனைத்துத் துறைகளையும் பாதிக்கவே செய்யும். உலகளாவிய இந்த பிரச்சனைகளில் நமக்கு ஆறுதலான ஒரே விஷயம் மக்கள் நலனையும் தேச நலனையும் சிந்திக்கும் ஆட்சி மத்தியில் அமைந்துள்ளது. அது சுட்டெரிக்கும் சூரியனில் இருந்து குடையாய் மக்களை காக்கும், நாம் மீண்டு விடுவோம் என்ற நம்பிக்கையை தருகிறது.

மதிமுகன்