சுஷ்மா ஸ்வராஜ்

சுஷ்மா ஸ்வராஜ், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பா.ஜ.கவின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தவர். பாரத அரசியலில் உச்சங்களை தொட்ட சில பெண்களில் சுஷ்மா ஸ்வராஜூம் ஒருவர். பாரதத்தின் பதினைந்தாவது மக்களவையின் எதிர்கட்சித் தலைவராகவும், டெல்லியின் ஐந்தாவது முதலமைச்சராகவும் முதல் பெண் முதல் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். பாரத வெளியுறவுத் துறை அமைச்சராக பதவி வகித்து நற்பெயர் பெற்ற சுஷ்மா சுவராஜ், முன்னாள் உச்சநீதிமன்ற வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார் சுஷ்மா ஸ்வராஜ்.

சுஷ்மா ஸ்வராஜ் ஹரியானா மாநிலம் அம்பாலாவில் 1952ல் பிறந்தவர். சமஸ்கிருதம், அரசியல் அறிவியலில் பட்டம் பெற்ற சுஷ்மா, அதன்பின் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். சுஷ்மா ஸ்வராஜின் தந்தை, ஹர்தேவ் சர்மா, ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தை சேர்ந்தவர். சுஷ்மா, 1970களில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்துடன் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். தனது 25ஆவது வயதிலேயே சட்டமன்ற உறுப்பினரானார்.

நாடாளுமன்ற உறுப்பினராக ஏழு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்று முறை சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜனவரி 2003 முதல் மே 2004 வரை, மத்திய சுகாதாரம், குடும்ப நலம் மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சராகவும் இருந்தார். ஜார்ஜ் பெர்னாண்டஸின் சட்டப் பாதுகாப்புக் குழு, ஜெயப்பிரகாஷ் நாராயணின் மொத்தப் புரட்சி இயக்கம் போன்றவற்றிலும் பங்கேற்று தீவிரமாகப் பணியாற்றினார்.

இந்திரா காந்திக்குப் பிறகு வெளிவிவகாரத்துறை அமைச்சராக பதவி வகித்த இரண்டாவது பெண் சுஷ்மா ஸ்வராஜ். 2006 முதல் 2009 வரையிலான பாரத இஸ்ரேல் நாடாளுமன்ற நட்புக் குழுவின் தலைவராகவும் செயல்பட்டார். வெளிநாடுகளில் சிக்கலில் சிக்கிய பாரத தேசத்தவர்களுக்குத் தேவையான உதவியை சுஷ்மா ஸ்வராஜ் செய்து வந்தார். சமூக வலைதளங்களில், பாரத தேசத்தவர்கள் எழுப்பிய கேள்விக்கு உடனுக்குடன் பதிலளித்தும் அவர்களின் சிக்கல்களை தீர்க்க உதவியும் வந்தார். இதனால், பலராலும் பாராட்டப்பட்டார்.