முதல்வருக்கு மருமகனால் சிக்கல்

சட்ட விரோத மணல் கடத்தல் வழக்கு தொடர்பாக பஞ்சாப் முதால்வர் சரண்ஜித்தின் மைத்துனி மகன் புபேந்தர் சிங், அவருடைய கூட்டாளியின் வீடுகளில் அமலாக்கத் துறையினர் கடந்த மாதம் 18ம் தேதி திடீர் சோதனை நடத்தினர். இதில், ரூ. 10 கோடி ரொக்கம், பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றில் ரூ. 8 கோடி ரொக்கமும், பெரும்பாலான ஆவணங்களும் புபேந்தர் சிங்கிடம் இருந்து கைப்பற்றப்பட்டவை. அவருடைய கூட்டாளி சந்தீப் குமாரிடம் ரூ. 2 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ஜலந்தரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் புபேந்தரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்கவில்லை. இதனையடுத்து அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதனால், தேர்தல் நடைபெறவுள்ள பஞ்சாப் மாநிலத்தின் தற்போதைய முதல்வர் சரண்ஜித்துக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. புபேந்தரின் கைது குறித்து விளக்கம் அளிக்கும்படி பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் சரண்ஜித்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. இதனால், காங்கிரசுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னையால், சரண்ஜித்தை முதல்வர் வேட்பாளராக காங்கிரஸ் அறிவிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.