முக்கிய வழித்தடங்களில் கவச்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் , ‘ஆத்மநிர்பர் பாரத்’ திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், 2,000 கி.மீ தூர முக்கிய ரயில் வழித்தடங்களில் ‘கவச்’ என்ற உள்நாட்டுத் தொழில்நுட்பத்தின் கீழ் கொண்டு வரப்படும் என்று நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது தெரிவித்திருந்தார்.

கவச் என்றால் என்ன? ஹிந்தியில் ‘கவச்’ என்றால் ‘கவசம்’ என்று பொருள். கவச் ஒரு மோதல் எதிர்ப்பு சாதன நெட்வொர்க். இது முற்றிலும் பாரதத்திலேயே தயாரிக்கப்பட்ட உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பம்.  ரயில்வே  துறையின் விபத்தில்லா பயணம் என்ற இலக்கை அடைய இது உதவும். இத்தொழில்நுட்பம், SIL-4 (பாதுகாப்பு ஒருமைப்பாடு நிலை) சான்றளிக்கப்பட்டது. அதாவது 10,000 ஆண்டுகளில் அதன் திறமையான வேலையின்போது ஒரே ஒரு பிழை நிகழவே வாய்ப்புள்ளது என்பது இதன் பொருள். வேகக்கட்டுப்பாட்டுக் கருவி, SOS பொத்தான்கள் உள்ளிட்ட ரயிலின் முக்கிய அமைப்புகள்,  ரயில் இயக்கம் போன்றவற்றில் தவறு கண்டறியப்பட்டால், ரயிலின் ஓட்டுநர், அடுத்த ரயில் நிலையம் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் தகவல்களை தானாகவே அனுப்பும். இது தற்போது ஹைதராபாத் அருகே சுமார் 600 ரயில் வழித்தடங்களில் ஒரு முன்னோடித் திட்டமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது.