நீட் அஸ்திரம் செல்லாது

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழக சட்டமன்றத்தில் தி.மு.க அரசு நிறைவேற்றிய நீட் தேர்வு ரத்து தீர்மானத்தை, சட்டமன்ற சபாநாயகருக்கே திருப்பி அனுப்பியதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. ஜனநாயகத்தின் பாதுகாவலர்கள் என்று மார்தட்டிக் கொள்ளும் திராவிட ஸ்டாக்குகள், 1ம் தேதியே ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதா குறித்து ஏன் வாய் திறக்கவில்லை? மசோதாவை ஆளுநர் அவசரகோலத்தில் பரிசீலிக்க முடியாது என்பதால் கால அவகாசம் எடுத்துள்ளார், ஜனநாயகப் பூர்வமாக நடந்துள்ளார். நீட் தேர்வால் சமூகநீதிக்கு குந்தகம் ஏற்படவில்லை. மாறாக, ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்கள் பயனடைந்துள்ளனர், சமூகநீதி குறித்து வேலூர் கிறித்தவக் கல்லூரி எழுப்பிய பிரச்சினைக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஆகியவற்றை சுட்டிக்காட்டியுள்ளார்.

தி.மு.க தொடர்ந்து இதில் வீண் வம்பு செய்வதில் நியாயமில்லை. கடந்த 9 மாத கால ஆட்சியில் இவர்கள் எந்த சாதனையையும் செய்யவில்லை. கொடுத்த வாக்குறுதிகள் அனைத்துமே பொய், பித்தலாட்டம்தான். பொங்கலுக்குக் கொடுத்த 21 பொருட்களில் மிகப்பெரிய ஊழல். இந்த முறைகேடுகளை மூடி மறைத்து நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் பதவிகளைக் கைப்பற்ற, தங்களுடைய இயலாமையை ஆளுநர் மீதும் மத்திய அரசின் மீதும் திருப்பிவிடும் முயற்சியே இது.

மாநில அரசின் அதிகார வரம்பை உணர்ந்திருந்தும், தொடர்ந்து நீட் அரசியல் செய்வது அழகல்ல. இனிமேலாவது தி.மு.க தனது இயலாமையை ஒப்புக்கொண்டு, பாடத்திட்டங்களில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்; மாணவர்களை தயார் செய்ய வேண்டும். இவர்களால் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்ததாக இவர்களே சொல்கிறார்கள். அரசியல் லாபத்திற்காக பழி பாவத்திற்கு இவர்கள் அஞ்சியதில்லை. நடக்கமுடியாத ஒன்றை ஏழை, எளிய மக்களிடத்தில் பிரச்சாரம் செய்து தவறான நம்பிக்கையூட்டுவது பெரிய குற்றம்.

ஆளுநர் இந்திய அரசியல் சாசனத்தின் பிரதிநிதி. குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து 9 மாதங்களே ஆகின்றன. மக்கள் முழுமையாக அங்கீகரிக்கவில்லை. சிலர் சமூக ஊடகங்களில் பதிவிடும் வார்த்தைகளுக்கு அவர் மயங்கக் கூடாது. உங்களுடைய நீட் அஸ்திரம் இனி செல்லுபடியாகாது. ஆளுநருடன் தேவையற்ற மோதலைக் கைவிடுங்கள், எஞ்சியுள்ள 4 ஆண்டு ஆட்சியில் கவனம் செலுத்துங்கள்’ என தெரிவித்துள்ளார்.