இந்த ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. இதனையொட்டி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்தினார். அதில் அவர், ‘ஜி.எஸ்.டி வரி வசூல் கடந்த சில மாதங்களில் ரூபாய் ஒரு லட்சம் கோடியை தாண்டி உள்ளது. ஏற்றுமதியில் நமது தேசம் தொடர்ந்து உச்சம் பெற்று வருகிறது. நாட்டின் முன்னேற்றத்திற்காகவே புதிய கல்வி கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. வள்ளுவரின் ‘கற்க கசடற’ எனும் குறளுக்கு இணங்க கல்வி கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக உள்ளூர் மொழிகள் ஊக்குவிக்கப்படுகின்றன. முக்கிய நுழைவுத் தேர்வுகளை தேசிய மொழிகளில் நடத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. 10 மாநிலங்களில், 19 பொறியியல் கல்லூரிகளில் இவ்வாண்டு 6 பாரத மொழிகளில் கல்வி கற்பிக்கப்படும்.
பெண்களை மையப்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் மத்திய அரசால் ஆரம்பிக்கப்பட்ட சுய உதவி குழுக்கள் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு போதுமான பயிற்சிகளை வழங்கி உள்ளது. பாரதத்தின் பாரம்பரியமான மழைநீர் சேகரிப்பு முறைகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள நதிகளை இணைக்கும் திட்டங்களில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
சிறு விவசாயிகள் அவர்களது அருகில் உள்ள பகுதிகளிலேயே தங்களது விளை பொருட்களை விற்பனை செய்யும் வகையிலான ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இயற்கை உணவு பொருட்களை உற்பத்தியில் கவனம் செலுத்தப்படுகிறது. பிரதமர் கிசான் திட்டம் மூலம் 11 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் குடும்பங்கள் 1.80 லட்சம் கோடி ரூபாய் பெற்றுள்ளனர். நாட்டின் வளர்ச்சியில் நமது சிறு குறு விவசாயிகளின் பங்கு குறிப்பிடத்தக்கது. அரசு எப்போதும் 80 சதவீத சிறு விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதியால் 11 கோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்கள் பயனடைந்துள்ளன. 2016 முதல், 56 வெவ்வேறு துறைகளில் 60,000 க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்கள் நாட்டில் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 6 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன’ என பேசினார்.