புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா திம்மியம்பட்டி கிராமத்தில் மதமாற்றம் செய்ய வந்தவர்களை கண்டித்த முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் கணேஷ் பிரபுவை காவல்துறை பொய்யான புகாரின் அடிப்படையில் கைது செய்தது. இதைக் கண்டித்து திம்மியம்பட்டி கிராம மக்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவித்தனர். புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில், இது சம்பந்தமாக புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் சந்தித்து பேசினார். பொய் வழக்குகள் போடப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து முன்னணி பொறுப்பாளர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என கோரிக்கை மனுவும் வழங்கப்பட்டது. இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய காடேஸ்வரா சுப்பிரமணியம், ‘தமிழகத்தில் தற்போது மதமாற்றங்கள் அதிகரித்துள்ளன. அரியலூர் மாணவி மதமாற்ற தற்கொலை விவகாரம், மதுரை சுதேசி இயக்க மாநில அமைப்பாளர் ஆதிஷேஷன் உட்பட 7 ஹிந்து இயக்க பொறுப்பாளர்களை காவல்துறை கைது செய்த விவகாரம், புதுக்கோட்டை, திம்மியம்பட்டி விவகாரம் என அனைத்தும் மதமாற்ற விவகாரம்தான். இதில் அரசும் காவல்துரையும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறினார்.