வரும் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் நாட்டின் ஜி.டி.பி எனப்படும் பொருளாதார வளர்ச்சி வரும் நிதியாண்டில் 9.2 சதவீதமாக இருக்கும். ஒமைக்ரானால் உலகம் முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால், பணவீக்கம் அதிகரித்து, பல நாடுகளின் மத்திய வங்கிகள் ரொக்கப் புழக்கத்தைக் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன. நம் நாட்டின் பொருளாதார நிலைத்தன்மை, நிதி நிலைக் குறியீடுகள், நிதித்துறை, சுகாதாரத் துறை, பணவீக்கம் ஆகியவை பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் நிலையில் வலுவாக உள்ளது. கரோனா தொற்று பாதிப்புகள் விவசாய துறையைப் பெரிய அளவில் பாதிக்காத நிலையில், விவசாயம், அதைச் சார்ந்த துறை சுமார் 3.9 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்யும். உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை உயருவதால் பாரதத்திலும் அதன் தாக்கம் இருக்கும். பணவீக்கம் குறித்து எச்சரிக்கை தேவை. பாரதத்தின் தொழிற்துறை வளர்ச்சி 11.8 சதவீதமும், சேவைத் துறை 8.2 சதவீதமும் வளர்ச்சி அடைய வாய்ப்புள்ளது. அடுத்து வரும் நாட்களில் எண்ணெய் வித்துப் பயிர்கள், பருப்பு வகைகள், தோட்டக்கலை போன்ற பயிர் பல்வகைத் தன்மைக்கு கூடுதல் முக்கியத்துவம் தரவேண்டும். ஏற்றுமதித் துறையின் வேகமான வளர்ச்சி, போதுமான நிதியாதாரம், மூலதனச் செலவுகள் போன்றவற்றால் நாட்டின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனியார் துறை முதலீடுகள் மூலம் பொருளாதாரம் மறுமலர்ச்சி பெறும்’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது.