சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில், புன்னைவனநாதர் சன்னிதியில் இருந்த மயில் சிலை மாயமானது. 2004ல் நடந்த சம்பவத்துக்கு, 2018ல்தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான உயர் நீதிமன்ற விசாரணையில், காவல்துறையின் விசாரணை, ஹிந்து அறநிலையத் துறையின் உண்மை கண்டறியும் குழுவின் விசாரணைகளின் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இதற்கு, ‘சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அனுப்பிய தகவலின் அடிப்படையில், துறை விசாரணை நிறுத்தப்பட்டுவிட்டது. விசாரணை முடியவில்லை” என அறநிலையத் துறை தெரிவித்தது. ’90 சதவீத விசாரணை முடிந்துள்ளது. 7 பேருக்கு இதில் தொடர்புள்ளதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இணை ஆணையராக இருந்த திருமகள் கைது செய்யப்பட்டு ஜாமினில் உள்ளார். மற்றவர்கள் முன்ஜாமின் பெற்றுள்ளனர், 85 சாட்சிகளிடம் விசாரணை செய்யப்பட்டுள்ளது. மேலும் சிலரை விசாரிக்க வேண்டியுள்ளது. 4 மாதங்களில் விசாரணையை முடிக்கப்படும்’ என காவல்துறை தெரிவித்தது. இதனையடுத்து, ‘உயர் நீதிமன்ற உத்தரவு இருந்தும் ஏன் விசாரணையை முடிக்கவில்லை? அதிகாரிகள் அஜாக்கிரதையாக உள்ளனர். விசாரணையின் தாமதத்தை நியாயப்படுத்தக்கூடாது. அறநிலையத் துறை ஆணையர் ஆஜராகி, விளக்கம் அளிக்க வேண்டும்’ என, நீதிபதிகள் தெரிவித்தனர்.