விருது நிராகரிப்பு அரசியல்

நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு பதவியேற்றது முதல், பத்ம விருதுகளை வழங்குவதில் ஒரு முன்னோடியாக செயல்படுகிறது. காங்கிரஸ் அரசில் பத்ம விருதுகளுக்கு செய்யப்பட்ட பெரிய இடத்து சிபாரிசுகள், அதற்காக செய்யப்பட்ட லாபிகள், அனுசரிப்புகள் போன்றவை அனைத்தும் தகர்த்தெறியப்பட்டன. கட்சி, பணம், பதவி போன்ற எல்லைகளுக்கு அப்பாற்பட்டு உண்மையாக தேசத்திற்கும் சமுதாயத்திற்கும் உழைக்கும் பெயர் தெரியாத சாதாரண பொதுமக்கள் கண்டறிந்து கௌரவிக்கப்பட்டு வருகின்றனர்.

கட்சிக்கு அப்பாற்பட்டு பல தலைவர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர். 2017ல் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு பத்ம விபூஷன் விருது, 2019ல் முன்னாள் குடியரசுத் தலைவரும், காங்கிரஸ்காரருமான பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இம்முறையும் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத்துக்கு பத்மபூஷன் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டு கொடுக்கப்பட்ட விருதுகளை இருவர் நிராகரித்துள்ளனர். மேற்கு வங்க முன்னாள் முதல்வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவருமான புத்ததேவ் பட்டாச்சார்யா. “விருதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. யாரும் என்னிடம் எதுவும் சொல்லவில்லை” என்று கூறியுள்ளார்.

வழக்கமாக பத்ம விருதுகள், அந்த நபருக்கு விருது அறிவிக்கப்படுவதற்கு முன்பே தனியாக தெரிவிக்கப்படும். அதன்படி, உள்துறை அமைச்சகம் புத்ததேவின் குடும்பத்திற்கு தொலைபேசியில் தெரிவித்தது. அவரது மனைவி மீரா பட்டாச்சார்யாதான் தொலைபேசியில் பேசினார். அறிவிப்புக்கு ஒரு நாள் முழுமையாக இடைவெளி இருந்தும், பட்டாச்சார்யாவின் குடும்பத்தினர் யாரும் விருதை ஏற்க விரும்பாதது குறித்து அமைச்சகத்திற்குத் தெரிவிக்கவில்லை. ஆனால், தற்போது, தொலைபேசி துண்டிக்கப்பட்டதாக அவர்கள் காரணம் கூறுகின்றனர். சி.பி.எம் தலைமை, பட்டாச்சார்யாவின் குடும்பத்திடம் விருதை மறுக்கும்படி வற்புறுத்தியதுதான் அவரது நிராகரிப்பின் பின்னணி என கூறப்படுகிறது.

பத்ம விருதை நிராகரித்த மற்றொரு நபர் 90 வயதான பாடகி சந்தியா முகர்ஜி. ‘பத்மஸ்ரீ விருது ஒரு இளைய தலைமுறை கலைஞருக்கு மிகவும் பொருத்தமாக இருக்கலாம். ஆனால், தன்னைபோல ஒரு பழம்பெரும் பாடகிக்கு அது குறைவானது’ என அவர் கருதுகிறார். அது அவரின் தனிப்பட்ட கருத்து. இதற்கு முன்பே ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகரும் தேசத்தின் மாபெரும் தொழிற்சங்கமான பி.எம்.எஸ் உட்பட பல அமைப்புகளை தோற்றுவித்தவருமான தத்தோபந்த் தெங்கிடி, சுபாஷ் சந்திரபோசின் குடும்பத்தினர், கம்யூனிச தலைவர் நம்பூதிரிபாட், பழம்பெரும் பாடகி ஜானகி, எழுத்தாளர் ஜெயமோகன் உள்ளிட்ட பலர் பல்வேறு காரணங்களுக்காக பத்ம விருதுகளை வாங்க மறுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மதிமுகன்