சீர்காழி என்றாலும் அகத்தியர் என்றாலும் நம் நினைவுக்கு வரும் அந்த உருவம் சீர்காழி கோவிந்தராஜனாகத்தான் இருக்க முடியும். இசைத்துறையில் கர்நாடக தமிழிசை மூவர், சங்கீத மும்மூர்த்திகள் என வகைப்படுத்துவது மரபு. முத்துத்தாண்டவர், அருணாச்சல கவிராயர், மாரிமுத்தாப்பிள்ளை ஆகிய இந்த கர்நாடக தமிழிசை மூவர் சீர்காழி மூவர் என அறியப்படுகின்றனர்.
அப்படி சங்கீதம் தழைத்தோங்கிய மண்ணில் பிறந்த கோவிந்ததராஜன், தன் சிறு வயதிலேயே ஆன்மிக இசையில் லயித்திருப்பார். இசை கற்கும் அதே வேளையில் கல்வியிலும் சிறந்து விளங்கினார். தன் தாய்மாமனின் நாடகக்குழுவில் நடித்தும் பாடியும் மக்கள் அபிமானத்தை பெற்றார் சீர்காழி கோவிந்தராஜன். பண்டிதர் பி.எஸ் செட்டியாரால் சினிமாத்துறையில் கால் பதித்தார். இசை மேதை ஜி. ராமநாதனால் வழிகாட்டப்பட்டு சென்னை தமிழிசைக்கல்லூரியில் படித்து இசைமணி பட்டமும் பெற்றார். கனீரென்ற வெண்கலக்குரல், தெளிவான உச்சரிப்பு, சுருதி சுத்தம் என தனக்கென தனி இலக்கணம் கொண்ட சீர்காழி கோவிந்த ராஜன், தன் மூன்று மணி நேர கச்சேரியை ஒரு மணி நேரம் சாஸ்திரிய சங்கீதம், ஒரு மணி நேரம் பக்திப்பாடல்கள், கடைசி ஒரு மணி நேரம் திரைப்பட பாடல்கள் என மூன்றாக பிரித்துக்கொள்வார்.
அவர் பாடிய கந்த சஷ்டிக் கவசம், அபிராமி அந்தாதி, திருப்புகழ் போன்ற பக்திப்பாடல்கள் மட்டுமல்ல, உள்ளத்தில் நல்ல உள்ளம், காதலிக்க நேரமில்லை, வெற்றி வேண்டுமா போன்ற திரையிசைப்பாடல்களும், அவர் நடித்த அகத்தியர் திரைப்படம் என அனைத்தும் காலத்தைக் கடந்து இன்றும் நிலைத்து நிற்கின்றன. பத்மஸ்ரீ, இசையரசு, இசைப் பேரறிஞர், கௌரவ டாக்டர் பட்டம், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இசைத்துறைத் தலைவர் என பல கௌரவங்களுக்கு உரியவராக விளங்கியவர் சீர்காழி கோவிந்தராஜன்.
இசைமணி சீர்காழி கோவிந்தராஜனின்பிறந்த தினம் இன்று