ஆக்ஸ்போர்டில் கௌரவம்

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள பாலியோல் கல்லூரி, ஆக்ஸ்போர்டில் முதன்முதலாக தத்துவம் (DPhil) பட்டத்திற்கான ஆய்வறிக்கையில் தேர்ச்சி பெற்ற பாரதத்தை சேர்ந்த டாக்டர் லக்ஷ்மன் சரூப்பின் பெயரை ஒரு புதிய கட்டிடத்திற்கு வைக்க முடிவு செய்துள்ளது. கல்லூரியின் பன்முகத்தன்மை, மதிப்புகள், வரலாற்றைப் பிரதிபலிக்கும் முன்னாள் மாணவர்கள், கல்வியாளர்களின் பெயர்களை கல்லூரி வளாகத்தின் புதிய கட்டிடங்களுக்கு சூட்டும் முடிவையடுத்து  இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பிளாக் சி1 கட்டடத்திற்கு அவரது பெயர் சூட்டப்படுகிறது. அன்றைய ஒருங்கிணைந்த பாரதத்தில் உள்ள லாகூரில் உள்ள ஓரியண்டல் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் எம். ஏ பட்டம் பெற்றிருந்தார் சரூப்,. 1917ல் பிரிட்டனில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட DPhil படிப்பில் அரசின் உதவித்தொகையோடு சேர்ந்த முதல் மாணவர் சரூப். ரிக்வேத காலத்தில் எழுதப்பட்ட யக்சாவின் நிருக்தா என்ற தனது ஆய்வறிக்கையை வெற்றிகரமாக சமர்ப்பித்தார். 1920ல் பாரதம் திரும்பினார், பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருத இலக்கியப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் ஓரியண்டல் கல்லூரியின் முதல்வராகவும் நியமிக்கப்பட்டார்.