பாஞ்சஜன்யா பத்திரிகையின் 75வது வருட விழா கொண்டாட்டத்தின் மெய்நிகர் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய ஆர்.எஸ்.எஸ் துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் கிருஷ்ணா கோபால், ‘எழுபது ஆண்டுகளுக்கு முன்னரே சீன எல்லை நெருக்கடி குறித்து பாஞ்சஜன்யா அரசுக்கு எச்சரித்திருந்தது. திபெத்தை சீனா தாக்கியபோது, அந்த நெருக்கடி குறித்து அன்றைய அரசை எச்சரித்த ஒரே பத்திரிகை பாஞ்சஜன்யா மட்டுமே. பல கட்டுரைகள் மூலம், சீனா திபெத்தை தாக்கும் போது வரவிருக்கும் நெருக்கடி குறித்து நேரு அரசாங்கத்தை பாஞ்சன்யா எச்சரித்ததுடன் திபெத்துக்கு பாரதம் ராணுவ ரீதியாக உதவ வேண்டும் என்றும், சீனா அதனை கைப்பற்றுவதைத் தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அன்றைய அரசு அதில் கவனம் செலுத்தவில்லை.
சுதந்திரம் அடைந்த உடனேயே, பாகிஸ்தான் ராணுவம், பழங்குடியினரைப் போல மாறுவேடமிட்டு, காஷ்மீரில் தாக்குதல் நடத்தியபோது, இது பழங்குடியினரின் தாக்குதல் அல்ல, மாறாக பாகிஸ்தான் ராணுவம் மாறுவேடமிட்டு தாக்குதல் நடத்துகிறது என்று அரசாங்கத்தை எச்சரித்தது பாஞ்சஜன்யா. சட்டப்பிரிவு 370க்கு எதிராக ஆரம்பத்திலிருந்தே குரல் எழுப்பி வந்தது பாஞ்சஜன்யா. பண்டிட் தீன்தயாள் உபாத்யாயவின் வழிகாட்டுதலின்படி 1948ல் பாஞ்சஜன்யா துவக்கப்பட்டது. அடல் பிஹாரி வாஜ்பாய் பத்திரிகை ஆசிரியராக இருந்து வழிநடத்தினார். அது பல ஏற்ற தாழ்வுகளை எதிர்கொண்டது ஆனால் தேசியவாத கருத்துக்களை பரப்புவதையும், நாடு எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து மக்களுக்கு விளக்கிச் சொல்வதையும் நிறுத்தவில்லை. இது மக்களுக்கு செய்திகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல் நிலைமை பற்றிய ஆழமான பகுப்பாய்வுகளையும் வழங்கியது.
பாரதம் சுதந்திரம் பெற்றபோது, கோவாவும், பாண்டிச்சேரியும் அந்நியர்களின் ஆட்சியின் கீழ்தான் இருந்தது என்பது பலருக்குத் தெரியாது. பாண்டிச்சேரி பிரெஞ்சுக்காரர்களால் ஆளப்பட்டது, கோவா போர்த்துகீசியர்களால் ஆளப்பட்டது. பாஞ்சஜன்யா தொடர்ந்து இந்த பிரச்சினையை எழுப்பி வந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு, மொழி அடிப்படையில் மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்டன. இதனை முதலில் எதிர்த்ததும் பாஞ்சஜன்யா தான். மொழியின் அடிப்படையில் மாநிலங்களை மறுசீரமைப்பது சரியான யோசனையல்ல என்று கூறியது. இந்த தேசியவாத இதழை மூடுவதற்கு பலர் பல முயற்சிகளை மேற்கொண்டனர். சில அரசாங்கங்கள் பாஞ்சன்யாவை நிரந்தரமாக மூடுவதற்கு தன் பலத்தைப் பயன்படுத்தியது. ஆனால், அது தப்பிப் பிழைத்தது மட்டுமல்லாமல் செழித்தும் வளர்ந்தது’ என கூறினார்.