ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பனிலிருந்து இலங்கையில் உள்ள தலைமன்னார் வரை கடலுக்கு அடியில் சுமார் 50 கி.மீ. தொலைவுக்கு ராமசேது அமைந்துள்ளது. இலங்கையில் ராவணனால் சிறைவைக்கப்பட்டிருந்த சீதாபிராட்டியை மீட்பதற்காகச் சென்ற ராமபிரானுக்கு உதவும் வகையில் வானரசேனையினர் இப்பாலத்தை கட்டினார்கள் என்பது ஹிந்துக்களின் திடமான நம்பிக்கை. ஆனால் இப்படி ஒரு பாலமே இல்லை, மணல் திட்டு மட்டுமே உள்ளது. இது அலை சுழற்சி காரணமாக ஏற்பட்ட விளைவு, ராம சேது என்பது வெறும் கட்டுக்கதை என்றெல்லாம் சிலர் பேசினார்கள், ஏசினார்கள். ராமன் பொறியியல் வல்லுனரா? அவர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார்? என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்விக்கணை தொடுத்தார். எத்தனையோ பேர் புழுதிவாரித் தூற்றினாலும் ஹிந்துக்களின் நம்பிக்கையை சற்றும் அசைக்க முடியவில்லை.
ராமசேது, இப்போதும் கடலுக்கு அடியில் உள்ளது என்று ஹிந்துக்கள் நம்பிக்கொண்டிருப்பது வெறும் கட்டுக்கதையல்ல. அது உண்மைதான் என்பதை அமெரிக்க விஞ்ஞானிகள் உறுதிபடுத்தியுள்ளனர். அமெரிக்காவில் உள்ள இந்தியானா பல்கலைக் கழகம், தெற்கு ஓரிகன் பல்கலைக் கழகம், கொலராடோ பல்கலைக் கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த விஞ்ஞானிகள் நுட்பமாக ஆய்வு நடத்தி இதை கண்டறிந்துள்ளனர்.
ராமசேது அமைந்துள்ள இடத்தில் எடுக்கப்பட்ட செயற்கைக் கோள் புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை துல்லியமாக ஆய்வு செய்து இந்த முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர். ‘ராமசேது பகுதியில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள மணல் திட்டுகள் வேண்டுமானால் இயற்கையாக உருவாகியிருக்கலாம். ஆனால் அங்குள்ள சுண்ணாம்பு கல் பாறைகள் மனிதர்களால் உருவாக்கப்பட்ட கட்டுமானத்தையே எடுத்துரைக்கின்றன. ராமசேது என்று கருதப்படுகின்ற இந்த கட்டுமானம் சுமார் 7 ஆயிரம் ஆண்டு தொன்மையானதாக இருக்க வாய்ப்புள்ளது’ என்று தெற்கு ஓரிகன் பல்கலைக் கழக வரலாற்று அகழ்வாராய்ச்சியாளர் செல்சியா ரோஸ் கூறியுள்ளார்.
அமெரிக்க ஆய்வாளர்களின் இந்த கண்டுபிடிப்பு பல தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பப்பட்டது. சமூக ஊடகங்களும் இதை வெளியிட்டன. 16 மணி நேரத்தில் 11 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதை பார்த்துள்ளனர் என்று புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது. மத்திய செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, இந்த ஆய்வு முடிவை மனமார வரவேற்றுள்ளார். ஜெய் ஸ்ரீராம் என்று தலைப்பிட்டு இதை அவர் பகிர்ந்துள்ளார். பாம்பனுக்கும் தலைமன்னாருக்கும் இடையே உள்ள ராமசேதுவை எக்காரணம் கொண்டும் சேதப்படுத்தக் கூடாது, மத்திய அரசு வெகு விரைவில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாண மனுவை சமர்ப்பிக்க இருக்கிறது. ஏற்கனவே டி.ஆர். பாலு மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்றுகிறேன் என்று கூறி இந்த ராமர் பாலத்தை சிதைக்க முற்பட்டார். ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததைக் கண்டு அவர் பின்வாங்க நேரிட்டது.
சேதுசமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் விருப்பமின்மை கிடையாது. ஆனால் அதே நேரத்தில் சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதாகக் கூறிக்கொண்டு ராமசேதுவை உடைக்கவேண்டும் என்பதற்கு ஹிந்துக்கள் யாரும் ஒப்புதல் அளிக்க முடியாது. ராம சேதுவுக்கு துளியும் சேதம் ஏற்படாத வகையில் சேதுசமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றவேண்டும் என்பதுதான் ஹிந்துக்களின் உணர்வு. இதை புரிந்துகொண்டுள்ள மத்திய அரசு தாக்கல் செய்யும் பிரமாண மனுவில் ஹிந்துக்களின் உணர்வு நிச்சயமாக பிரதிபலிக்கும் என்பது திண்ணம்.