தேசிய விமான விளையாட்டு கொள்கை

உலகின் விமான விளையாட்டு முன்னணி நாடுகளில் ஒன்றாக உருவாகும் ஆற்றல் பாரதத்துக்கு உள்ளது. பூகோள ரீதியில் விரிவான பரப்பு, பல்வேறு சூழல்களுடன் பரந்து விரிந்த நிலப்பரப்பு, உகந்த தட்ப வெப்பநிலையை கொண்டுள்ளது. குறிப்பாக, இளைஞர்களை அதிகம் கொண்ட தேசம் இது. சாகச விளையாட்டுக்களுக்கான கலாச்சாரமும், விமானப் போக்குவரத்தும் தற்போது வளர்ந்து வருகிறது. விமான விளையாட்டு நடவடிக்கைகள் மூலம், நேரடி வருவாய், விமானப் பயணம், சுற்றுலா, உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு போன்ற பலதரப்பட்ட பயன்கள் கிடைக்கும். இதன் காரணமாக, மத்திய அரசு விமான விளையாட்டு துறையை பாதுகாப்பாகவும், எளிதில் அணுகும் வகையிலும், நிலைத்தன்மையுடன் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. இதனை முன்னிட்டு மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், வரைவு ‘தேசிய விமான விளையாட்டு கொள்கை ‘யை பொதுமக்களின் கருத்துக்காக வெளியிட்டுள்ளது. வரைவு கொள்கையை அமைச்சகத்தின் இணைய தளத்தில் : https://www.civilaviation.gov.in/sites/default/files/Draft-NASP-2022.pdf என்ற இணைப்பு மூலம் பெறலாம். கொள்கை வகுப்பாளர்கள், விமான விளையாட்டு பயிற்சியாளர்கள், பொதுமக்களின் ஆலோசனைகளைப் பெற்று இது உருவாக்கப்படும் என்பதால், மக்கள் ஆலோசனைகளை 2022 ஜனவரி 31ம்தேதிக்குள் அனுப்பலாம்.