ராமர் கோயில் வழக்கில் காங்கிரஸ் சகுனி வேலை

 

அயோத்தி ஸ்ரீராம ஜென்ம பூமியில் இருந்த சர்ச்சைக்குரிய கட்டிடம் இடிக்கப்பட்டு 25 ஆண்டுகள் கடந்து விட்டன. அதன் இறுதிகட்ட விசாரணை உச்ச நீதிமன்றத்தில் டிசம்பர் 5 அன்று துவங்கியது.

சன்னி வக்ஃபு வாரியம் சார்பில் வழக்கறிஞரும் முன்னாள் சட்ட அமைச்சருமான கபில் சிபில் ஆஜராகி வாதாடினார். அவர் ஒரு வழக்கறிஞராக இருந்து முஸ்லிம்களின் சார்பில் வாதாடினால் அதை யாரும் ஆட்சேபிக்கப் போவதில்லை. ஆனால் அவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்துகொண்டு ஒரு தலைப்பட்சமாக முஸ்லிம்களுக்கு ஆதரவாக வாதாடுவது காங்கிரஸின் கயமை.

இந்த வழக்கின் விசாரணையை அடுத்துவரும் நாடாளுமன்றத் தேர்தல் 2019 ஜூலையில் முடிந்த பிறகு நடத்தவேண்டும் என்று வாதாடினார். ஆனால் நீதிமன்றம் அதை ஏற்க மறுத்து வழக்கை பிப்ரவரி 8ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

ஸ்ரீராம ஜென்ம பூமியில் ஆலயம் அமைத்திட ஷியா வக்ஃப் வாரியம் ஆதரவு தெரிவித்துள்ளது. நாங்கள் கோயிலுக்கு வெளியே வெகு தூரத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதியில் மசூதி கட்டிக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்கள். இதை சன்னி முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பொதுவாக முஸ்லிம்கள் அவ்வளவு சுலபத்தில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

வழக்கு விசாரணையை மேலும் மேலும் ஒத்திவைக்க காங்கிரஸ் விரும்புகிறது. முஸ்லிம்களின் ஒட்டுமொத்த வாக்கு வங்கியை மனதில் வைத்துக்கொண்டு காங்கிரஸ் செயல்படுவது அயோக்கியத்தனம். வழக்கு முடிந்து ராமர் கோயில் கட்டப்பட்டு விட்டால் எங்கே ஹிந்துக்கள் ஹிந்து விரோத மதசார்பின்மை பேசும் காங்கிரஸைக் கைகழுவிவிடப் போகிறார்களோ என்ற உதறலில் காங்கிரஸ் வழக்கு விசாரணையை இழுத்தடிக்க பார்க்கிறது.

உச்ச நீதிமன்றம் வழக்கை விரைவாக விசாரித்து ஹிந்துக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு நல்ல தீர்ப்பினை வழங்கவேண்டும்.