துயிலெழுப்ப வந்த தோழியர் கேட்பது போல் அமைந்தது “ பாசம் பரம்சோதிக்கென்பாய்…” என தொடங்கும் பாசுரம். தற்போது உறங்குவது போல நடிக்கும் தோழியை நோக்கி துயில் எழுப்பிவந்த தோழிகள், ”இராப்பகலாக எங்களுடன் அமர்ந்து பேசும் போதெல்லாம் “எனது பாசம் எல்லாம் எப்போதும் ஜோதி வடிவான அண்ணாமலையாரிடம் தான், என்றாய். ஆனால், இப்போது நீராட அழைத்தால் வர மறுத்து அயர்ந்து உறங்குகிறாயே,”, என்கிறார்கள். வெகுண்டு எழுந்த அப்பெண், “சீ சீ ! அப்படிப் பேசாதீர். ஏதோ கண்ணயர்ந்து விட்டேன் என்பதற்காக இப்படியா கேலி பேசுவது?” என்று நாணுகிறாள்.
அவளுக்கு பதிலளித்த தோழியர், கண்களை கூசச்செய்யும் பிரகாசமான திருவடிகளைக் கொண்ட சிவபெருமானை வழிபட தேவர்களே முயற்சிக்கிறார்கள். ஆனால், அவர்களால் முடியவில்லை. நமக்கோ, நம் வீட்டு முன்பே தரிசனம் தர வந்து கொண்டிருக்கிறான். அவன் சிவலோகத்தில் வாழ்பவன், சிதம்பரத்தில் நடனம் புரிபவன். நம்மைத் தேடி வருபவன் மீது நாம் எவ்வளவு பாசம் வைக்க வேண்டும், நீயே புரிந்து கொள்வாயாக,” என்றனர்.