செல்வாக்கு உள்ள பிரமுகர்களும் பணக்காரர்களும் கோயில்களில் மூலஸ்தானம் அருகில்வரை சென்று வழிபட முடியும். அவர்களுக்கு மாலை, மரியாதைகள் என ராஜ உபச்சாரமே நடைபெறும். அதே நேரத்தில் தர்ம தரிசனத்தில் வருகிற பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருந்து, வெகு தூரத்தில் இருந்தே வழிபட முடியும். இந்நிலை மாற்றப்பட வேண்டும் என ஒருவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கின் தீர்ப்பில், சிறப்பு தரிசன டிக்கெட்டில் சென்று தரிசனம் செய்கிறவர்களும், இலவச தரிசனம் செய்கிறவர்களும் மூலஸ்தானத்திலிருந்து சம தூரத்தில் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பாராட்டப்பட வேண்டியதுதான். இருந்தாலும் கட்டண தரிசனம் நீக்குவது பற்றி நீதிபதி ஒன்றும் தெரிவிக்கவில்லை. கட்டண தரிசனம் என்பது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். கட்டணம் வாங்கி அனுமதிப்பதற்கு கோயில் ஒன்றும் கண்காட்சி சாலை இல்லை. தர்ம தரிசனம், கட்டண தரிசனம் என்று வைத்து சேவார்த்திகளை (பக்தர்களை) பிரித்துப் பார்ப்பது அநியாயம்.
இலவச தரிசனம், தர்ம தரிசனம் என்ற வார்த்தைகள் பக்தர்களை புண்படுத்துகின்றன. ஐயோ பாவம்… காசு பணம் இல்லையா… சரி… போனால் போகட்டும் சாமியை கும்பிட்டுக் கொள்” என்று பரிதாபப்பட்டு சொல்ல அறநிலையத் துறைக்குத் தோன்றியிருப்பது அவலம்.
ராமநாதபுரத்தில் ஆட்சி செய்த விஜயரகுநாத சேதுபதி தனது சொந்த மாப்பிள்ளை ராமேஸ்வரம் கோயிலில் தரிசனம் செய்ய கட்டணம் வசூலித்தார் என்பதற்காக அவரைச் சிரச்சேதம் செய்ய உத்தரவிட்டார் என்பது தமிழகம் கண்ட ஆலய வரலாறு.
அப்படிப்பட்ட தமிழகத்தில் சுவாமி தரிசனம் செய்ய கட்டணம் வசூலிப்பது கேவலமானது, வெட்ககரமானது.
தெய்வ சன்னிதியில் ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு கூடாது. மன அமைதி தேடி கோயில் வருகிற பக்தர்கள் நிம்மதியாக தரிசனம் செய்து செல்ல ஹிந்து அறநிலையத் துறை முன்வர வேண்டும்.