பாடதிட்டத்தை மாற்ற கல்விக்குழு பரிந்துரை

பா.ஜ.க எம்.பி வினய் பி சஹஸ்ரபுத்தே தலைமையில் அமைக்கப்பட்ட கல்விக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவில் பா.ஜ.கவைச் சேர்ந்த 4 எம்.பிக்கள், தி.மு.க எம்.பி ஆர்.எஸ் பாரதி, அ.தி.மு.கவின் எம்.பி தம்பிதுரை, திருணமுல் காங்கிரசின் சுஷ்மிதா தேவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா உள்ளிட்ட 21 உறுப்பினர்கள் இடம் பெற்றிருந்தனர்.

இந்த குழு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், வேதங்கள் மற்றும் பிற சிறந்த பாரத நூல்களில் இருந்து வாழ்க்கை மற்றும் சமூகம் பற்றிய பண்டைய ஞானம், அறிவு மற்றும் போதனைகளை பள்ளி பாடத்திட்டத்தில் இணைக்க வேண்டும். தேசத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள், அவர்களின் பங்களிப்புகள் குறித்து வரலாற்றுப் பாடப்புத்தகங்களில் இடம்பெறும் வகையில் மறுஆய்வு செய்வது அவசியம் உள்ளது.

சுதந்திர போராட்டத்தில் மறைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும். விக்ரமாதித்தியர்கள், சோழர்கள், சாளுக்கியர்கள், விஜயநகர பேரரசு, திருவாங்கூர், அஹோம்கள், சீக்கியர்கள், மராட்டியர்களின் பங்களிப்புகள் இடம்பெற வேண்டும். என்.சி.இ.ஆர்.டி புத்தகங்களில் முஸ்லிம் படையெடுப்பாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. . வரலாற்று திரிபுகளை நீக்க வேண்டும்.

நாலந்தா, விக்ரம்ஷிலா, தக்ஷிசீலா போன்ற பழங்காலப் பல்கலைக் கழகங்களில் பின்பற்றப்பட்ட கல்வி முறைகள் ஆய்வு செய்யப்பட்டு, கல்விதிட்டம் ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட பலர் குற்றவாளிகளாக காட்டப்பட்டிருப்பது நீக்கப்பட வேண்டும். மஹாஸ்வேதா தேவி, கல்பனா சாவ்லா, கிட்டூர் சென்னம்மா, எம்.எஸ் சுப்புலட்சுமி, சாவித்ரிபாய் ஃபுலே போன்றவர்களின் பங்களிப்புகள் பாடத்திட்டத்தில் இணைக்கப்பட வேண்டும். பெண் சாதனையாளர்களின் பங்கை முன்னிலைப்படுத்த வேண்டும்’ என பரிந்துரைத்துள்ளது.