இந்த ஆண்டுக்கான மகரிஷி கார்வே ஸ்த்ரீஷி க்ஷன் சம்ஸ்தாவின், 26வது தேசிய அளவிலான ‘பய கார்வே’ விருது, ஜம்முவைச் சேர்ந்த அதிதி பிரதிஷ்டானின் கிளம்பி பங்கஜா வல்லிக்கு வழங்கப்பட்டது. ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் இந்திரேஷ் குமார் மற்றும் மகரிஷி கார்வே ஸ்த்ரீஷி க்ஷன் சம்ஸ்தா அமைப்பின் தலைவர் ஸ்மிதா கைசாஸ் ஆகியோர் இவ்விருதை அவருக்கு வழங்கினர். இந்திரேஷ் குமார், ‘ஒரு மனிதனை நல்ல கல்வியும் கலாச்சார மரபுகளும் இந்த உலகில் வாழத் தகுதியான மனிதனாக உருவாக்குகிறது’ என கூறினார். விருது பெற்ற பங்கஜா வல்லி, ‘கடந்த 27 ஆண்டுகளாக இந்த உன்னத பணியில் ஈடுபட தனக்கு தூண்டுகோலாக அமைந்தது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சேவை பணிகளே’ என கூறினார்.
1990களில் ஜம்மு காஷ்மீருக்கு குடிபெயர்ந்த பங்கஜா வல்லி, அன்றில் இருந்து இன்றுவரை பயங்கரவாதத் தாக்குதல்கள், குண்டுவெடிப்புகளால் பாதிக்கப்பட்ட மக்களின் பராமரிப்பு மற்றும் சிகிச்சைக்காக தொண்டாற்றி வருகிறார். அனாதையாக்கப்பட்ட பல சிறுமிகளை தாயாக இருந்து காத்து வருகிறார். அந்த சிறுமிகளுக்கு திருமணம், வாழ்க்கை முன்னேற்றம் போன்றவற்றிற்கும் அயராது உழைத்து வருகிறார். கார்கில் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவியுள்ளார். இதன் காரணமாக, பயங்கரவாத குழுக்களிடமிருந்தும் அவருக்கு பல கொலை மிரட்டல்கள் வந்துள்ளன, ஆனால் அவைகளால் அவரின் சமூக சேவை பணி சிறிதும் குறையவில்லை. காவல்துறை வழங்கிய பாதுகாப்பையும் ஏற்க மறுத்துவிட்டார். பிரிவினைவாதிகளால் பல நீதிமன்ற வழக்குகளையும் சந்தித்துள்ளார்.