பொறுப்புடைமை அவசியம்

இணையதளங்கள் நிர்வாகம் தொடர்பான முதலாவது இந்தியா இன்டர்நெட் நிர்வாக அமைப்பின் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ‘இணையதளம், சமூக வலைதளங்களின் பயன்பாடு, அதில் பதிவிடும் கருத்துகள் பல மாறுதல்களை சந்தித்துள்ளன. அவற்றின் மீதான அரசின் நிர்வாக நடைமுறைகளும் மாறுவது அவசியம். சமூக வலைதளங்கள், இணையதளங்களில் பதிவிடப்படும் கருத்துகளை உண்மை என மக்கள் நம்புகின்றனர். அந்தப் பதிவுகளின் உண்மை தன்மையை உரியவர்கள் தெரியப்படுத்த வேண்டும். ஆனால் இந்தப் பதிவுகளுக்கு யார் பொறுப்பேற்பது? அதை நிர்ணயிக்க இந்த அமைப்பு பரிந்துரைகள் அளிக்க வேண்டும்.தற்போது இந்த தளங்கள் கருத்து பரிமாற்றத்துடன் முடிவடையவில்லை. இணைய வர்த்தகம் அதிகரித்துள்ளதால், பல தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சைபர் குற்றங்களில் இருந்து பாதுகாப்பு தொடர்பாகவும் விவாதிக்க வேண்டும்’ என்று பேசினார். பிறகு பேசிய தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜிவ் சந்திரசேகர், ‘இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களுக்காக நாம் உருவாக்கும் நிர்வாக நடைமுறைகள் உலகுக்கே முன்னோடியாக, முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அடுத்த சில ஆண்டுகளில் நம் நாட்டில் இணையதளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டிவிடும். அதை நினைவில் வைத்து வழிமுறைகளை உருவாக்க வேண்டும்’ என்று கூறினார்.