மகாராஷ்டிர மாநிலம், லாத்தூரில் உள்ள மவுஜே மசலகாவில் அல்ட்ரா ஹை பெர்ஃபார்மன்ஸ் ஃபைபர் ரெயின்ஃபோர்ஸ்டு கான்கிரீட் (UHPFRC) தொழில்நுட்பத்தால் கட்டப்பட்ட நாட்டின் முதல் சிறப்புப் பாலத்தை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆய்வு செய்தார். அப்போது பேசிய அவர், ‘பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், அனைத்து துறைகளிலும் நிலையான தீர்வுகள், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பத்தை ஊக்குவிப்பதற்காக மற்ற நாடுகளில் பயன்படுத்தப்படும் வெற்றிகரமான தொழில்நுட்பங்களை பின்பற்ற மத்திய அரசு முயற்சி எடுத்துள்ளது’ என தெரிவித்தார். 111 மீட்டர் நீளமும், 16 மீட்டர் அகலமும் கொண்ட இந்தப் பாலம், இந்த சிறப்பு தொழில்நுட்பத்தின் உதவியுடன் 55.50 மீட்டர் நீளம் கொண்ட 2 தூண்களுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் இரும்பு ஸ்லாட்டுகளுக்குப் பதிலாக ஸ்டீல் ஃபைபர் பயன்படுத்தப்படுவதால் பாலம் மிக வலிமையாகவும் லகுவாகவும் இருக்கும். பாலத்தின் வேலையை எளிதாகக் கையாள முடியும், கட்டுமானப் பணிகளும் விரைவாக முடிக்க முடியும். மேலும், இந்த பாலம் எளிதில் பழுதாகாது, துருப்பிடிக்காது. புதிய தொழில்நுட்பத்தில் கட்டப்பட்ட இந்த பாலத்தின் செலவும் 15 முதல் 25 சதவீதம் வரை குறைகிறது.