ஒரு டிரில்லியன் பொருளாதாரம் சாத்தியமா?

தமிழக அரசும் இந்திய தொழில் கூட்டமைப்பும் இணைந்து ‘கனெக்ட் 2021’ தொழில்நுட்ப கருத்தரங்கை வரும் 26, 27 தேதிகளில் சென்னையில் நடத்துகின்றன. இதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், வரும் 2030க்குள் தமிழகம் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார உற்பத்தியை அடையே வேண்டும் என தெரிவித்துள்ளார். இதனிடையே, இந்த திட்டத்தை முதலில் முன்வைத்தவர்கள் நாங்கள்தான் என கமல்ஹாசன் வேறு எசப்பாட்டு பாடுகிறார்.

லட்சியம் பெரியதுதான், வரவேற்கத்தக்கதுதான். ஆனால், மொத்த பாரதத்தின் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலராக உயர்த்த மத்திய அரசு முயன்று கொண்டுள்ளது. இதில் தமிழகம் மட்டுமே ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பது நம்பும்படியாக இல்லை. மேலும், தமிழகத்தில் தி.மு.க ஆட்சியில் இந்த இலக்கு சாத்தியமா என்றால் அவர்கள் கடந்து வந்த பாதை, அதனை கானல் நீராகவே காட்டுகிறது.

ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடைய, முதலில் ஊழல், லஞ்சம், கமிஷன், கட்டிங், மாமூல் அற்ற வெளிப்படையான ஆட்சி, நிர்வாகம் வேண்டும். இதில் தி.மு.கவினர் எப்படி என்பது ஏற்கனவே மக்களுக்கு நன்றாகத் தெரியும். இத்திட்டத்திற்கு அடிப்படையான உள்கட்டமைப்புகள் பல புதிதாக உருவாக்கப்பட வேண்டும். ஏற்கனவே உள்ள உள்கட்டமைப்புகள் பலப்படுத்தப்பட வேண்டும். ஆனால், சமீபத்திய மழையில், தலைநகரான சென்னையே என்ன பாடுபட்டது என அனைவருக்கும் தெரியும்.

கடந்த 50 ஆண்டுகால திராவிட ஆட்சியில், தலைநகரையே முறையாக பராமரிக்காதவர்கள் எப்படி இந்த மாபெரும் திட்டத்தை செயல்படுத்துவார்கள்? இத்தனைக்கும் சென்னை மேயர், துணை முதல்வராக இருந்தவர் ஸ்டாலின். தற்போது முதல்வராக உள்ள அவரின் கொளத்தூர் தொகுதியே மழையில் சின்னாபின்னமானது. ஒரு மாநிலம் வளர மத்திய அரசின் ஒத்துழைப்பு அவசியம் தேவை. ஆனால், மத்திய அரசை முறைப்பதையே முழுநேரத் தொழிலாக தி.மு.கவும் அதன் கூட்டணி கட்சிகளும் செயல்பட்டுக் கொண்டிருக்கையில் இந்த லட்சியம் எப்படி சாத்தியம்?

சேலம் எட்டு வழி சாலை, ஹைட்ரோ கார்பன் திட்டம், ஸ்டெர்லைட் ஆலை என தமிழக முன்னேற்றத்திற்கான அனைத்து திட்டங்களையும் எதிர்த்தவர் ஸ்டாலின். அப்படி இருக்கையில், ஆட்சியில் இல்லாதபோது ஒருமாதிரியும் ஆட்சிக்கு வந்தவுடன் வேறு மாதிரியும் பேசுவது என இரட்டை நாக்குடன் செயல்படபோகிறாரா? அப்போது நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்தவர், தன் ஆட்சியில் மட்டும் புதிய திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தும்போது மக்கள் கேள்வி கேட்க மாட்டார்களா?

மதிமுகன்