சேவையால் துலங்கும் கலாச்சாரம்

ராஷ்ட்ரிய சேவா பாரதி மற்றும் சாந்த் ஈஷ்வர் அறக்கட்டளை அமைப்புகள் இணைந்து சமூக சேவை செய்யும் பல்வேறு அமைப்புகள், சமூக சேவகர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சியை டெல்லியில் நடத்தியது. 12 சேவை அமைப்புகளும் சமூக சேவகர்களும் தலா ரூ. 1 லட்சம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத், ‘சேவை செய்யும் சேவா பாவத்தால் நமது பாரத கலாச்சாரம் உயிர்ப்புடன் உள்ளது. பல நாகரிகங்கள் தோன்றி மறைந்து விட்டன.  ஆனால் நமது பாரதிய நாகரிகம் உலகிற்கே வழிகாட்டும் பாதையில் பயணிக்கிறது. ஏனெனில், அது அனைத்தையும் இணைத்துக் கொள்கிறது. எனவே யாராலும் இதனை அழிக்க முடியவில்லை.

இவ்விழாவில், தன்னலமற்ற சேவை செய்தவர்களை கௌரவிப்பதை பார்க்கும்போது, ​​பாரத சமூக அமைப்பு யாரையும் எதிர்க்காமல் அரவணைக்கும் வகையில் உள்ளது தெரியும். வழிபாட்டு முறைகளை ஒருவர் ஏற்றாலும் ஏற்காவிட்டாலும், தனது சொந்தத் திறனுக்கு ஏற்ப சேவை உணர்வுடன் செயல்படுகிறார். இதுவே மனிதனின் பண்பாகும். ஒருவன் தூய்மை, பணிவு, கருணையால் நிறைந்து, அனைத்தையும் ஒன்றாக காண்பதில் நம்பிக்கையுடன், யாரையும் எதிர்க்காதபோது இந்த குணத்தைப் பெறுகிறான்.

சுதந்திரத்திற்குப் பிறகு நமது சமுதாயம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கவில்லை. அகங்காரத்தை விடுத்து உணர்வு மற்றும் கருணை அடிப்படையில் இருந்தால் வேகமாக வளர்ச்சிபெற முடியும்.

கடந்த 200 ஆண்டுகளில் உலகின் பெரிய ஆளுமைகளில் அதிகமானோர் பாரதத்தை சேர்ந்தவர்கள். ஆன்மிக எண்ணத்துடனும் மதநம்பிக்கையுடனும் இருப்பது நல்லதுதான். ஆனால் நான் காட்டிய பாதையில்தான் நீ நடக்க வேண்டும் என்று அது போதிக்கவில்லை. வழியை மட்டும் நான் காட்டுகிறேன்,  நீ இந்த பாதையில் நடந்தால் நல்லது. அல்லது நீயாகவே சரியான பாதையில் நடந்தாலும் நல்லதுதான் என்கிறது.

ஒரு நபர் தனது எண்ணங்கள், உணர்திறன் காரணமாக அறியப்படுகிறார். இவை இல்லாவிட்டால் மனிதனுக்கும் மிருகத்திற்கும் வித்தியாசம் இருக்காது. மனிதர்களிடம் சேவை உணர்வு உள்ளது. அதற்காக அவர்கள் சமூக ரீதியாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ யாரையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை. சமூகத்திற்கு உழைக்கும் நமது எண்ணம் நேர்மையாக இருந்தால் அந்தப் பணியை முடிப்பதில் எந்தத் தடையும் இருக்காது.

பொருளாதார ரீதியாக மட்டுமின்றி, நமது நடத்தையிலும் நம் குடும்பத்திற்கு நல்லவற்றை நாம் கற்றுத் தர வேண்டும். இதனால் வருங்கால சந்ததியினர் தவறான பாதையில் செல்ல மாட்டார்கள். இன்றைய இளைஞர்கள் இதை விரைவாகவும் வேகமாகவும் கற்றுக் கொள்ள வேண்டும்’ என கூறினார்.