பாரதத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் முதல் விருப்பத் தேர்வாக உள்ளது பெங்களூரு. அங்கு பல்லாயிரம் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஏற்கனவே உள்ளன. புதிதாக பல பதிவு செய்யப்படுகின்றன. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அனைத்தும் பெங்களூருவை மையப்படுத்தி இருக்கக் கூடாது என்பதற்காக கர்நாடக அரசு ஒரு புதிய திட்டத்தை வகுத்துள்ளது. ‘பியாண்ட் பெங்களூரு ஸ்டார்ட்அப் கிரிட்’ என்ற இத்திட்டத்தின் மூலம் பெங்களூருவில் இருக்கும் ஸ்டார்ட்அப் வாய்ப்புகள் அனைத்தையும் மங்களூர், மைசூர், ஹூப்ளி போன்ற நகரங்களிலும் ஏற்படுத்தி ஸ்டார்ட்அப்களை அங்கு துவங்க ஊக்குவித்து வருகிறது. இதன் மூலம் அப்பகுதிகளும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் ஒருசேர வேகமாக வளர முடியும். கர்நாடகா டிஜிட்டல் எகானமி மிஷன் மூலம் எதிர்காலத் தேவைக்கு ஏற்ப திறன் வாய்ந்த ஊழியர்களை உருவாக்கும் முயற்சியிலும் அம்மாநில அரசு இறங்கியுள்ளது. இப்புதிய ஸ்டார்ட்அப் கிளஸ்டர் மூலம் 5,000 புதிய நிறுவனங்கள், 10 லட்சம் வேலைவாய்ப்புகள், 10 பில்லியன் டாலர் ஏற்றுமதி வர்த்தகத்திற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து ஐ.பி.எம் நிறுவனம், க்ளோடச் போன்றவை மைசூருவில் அலுவலகம் அமைத்துள்ளன. ஐமெரிட் ஹூப்ளியில் அலுவலகத்தை அமைத்துள்ளது. இதேபோன்ற திட்டத்தைக் தமிழக அரசும் கொண்டு வந்து, மதுரை, கோவை, சேலம் திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் வளர்ச்சியை ஏற்படுத்த முனையலாமே?