அபிநந்தனுக்கு வீர் சக்ரா

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடிதர இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் எல்லை கட்டுபாட்டுக் கோட்டை தாண்டி ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்தின. இத்தாக்குதலில் பாலகோட் பகுதியில் இயங்கி வந்த பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன. இதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதற்கு பழிவாங்க பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள், காஷ்மீரில் ஊடுருவி தாக்குதல் நடத்த முயன்றன. அப்போது இந்திய விமானப்படை தனது போர் விமானங்களை உடனடியாக அவற்றை எதிர்க்க அனுப்பியது. இதனையடுத்து வானில் நடைபெற்ற சண்டையில் பாகிஸ்தான் விமானப்படையின் எஃப் 16 ரக போர் விமானத்தை அபிநந்தன் விரட்டி சென்று சுட்டு வீழ்த்தினார். அப்போது அவரது மிக் 21 பைசன் போர் விமானம் எதிரிகளின் தாக்குதலுக்கு உள்ளானது. இதில் அபிநந்தன் பாகிஸ்தானில் சிக்கி கொண்டார். பாகிஸ்தான் ராணுவத்தினர் விசாரணை என்ற பெயரில் அவரை சித்திரவதை செய்தனர். தீவிர சர்வதேச அழுத்தம் மற்றும் பாரதத்தின் ராணுவ நடவடிக்கை குறித்த அச்சம் காரணமாக பாகிஸ்தான் அவரை விடுவித்தது. அவரின் வீரதீர சாகசத்தை பாராட்டி மத்திய அரசு, போர்க்கால விருதான வீர் சக்ராவை அறிவித்தது. ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், குருப் கேப்டன் அபிநந்தன் வர்த்தமானுக்கு வீர் சக்ரா விருதை வழங்கி கௌரவித்தார்.