யார் பணக்காரர்?

பில்கேட்ஸ் கம்பியூட்டர் உலகின் ஜாம்பவான், உலகின் முதல் பணக்காரனாக இருந்தபோது ஒரு தடவை பாரதம் வந்திருந்தார். அப்போது பில்கேட்ஸ்சை பார்த்து ஒருவர், உங்களைவிட பணக்காரர் யாராவது இருக்கிறாரா? என கேட்டார்.

பில்கேட்ஸ், ஆம் ஒருவர் இருக்கிறார் என்றார், யார் அவர்? என அந்த நபர் வினவ,

பில்கேட்ஸ், பல வருடங்களுக்கு முன்பு நான் வேலையில் இருந்து நீக்கப்பட்டேன். நியூயார்க் விமான நிலையம் சென்றேன், நாளிதழ் ஒன்றை வாங்கலாம் என நினைத்தேன். ஆனால் என்னிடம் சில்லறை இல்லை. எனவே வாங்கவில்லை.

அப்போது, ஒரு கறுப்பினச் சிறுவன் என்னை அழைத்து அந்த நாளிதழ் ஒன்றை கொடுத்தான். என்னிடம் சில்லறை இல்லை என்றேன். அதற்கு அவன், பரவாயில்லை இலவசமாக கொடுக்கிறேன் என்றான். மூன்று மாதம் கழித்து மீண்டும் அங்கு சென்றேன். மறுபடியும் அதே கதைதான். நாளிதழை இலவசமாக கொடுத்தான். ஆனால் நான் வாங்க மறுத்தேன்.

அதற்கு அந்த  சிறுவன், பரவாயில்லை, இன்று எனக்கு கிடைத்த லாபத்தில் இருந்து தருகிறேன் என்று சொல்லி கொடுத்தான். 19 வருடங்கள் கழிந்தன, நான் பணக்காரன் ஆகிவிட்டேன். அந்த சிறுவனை மறுபடியும் காணும் ஆவல் வந்தது. பல நாள் தேடுதலுக்கு பின் கண்டுபிடித்தேன். என்னை தெரிகிறதா என்று கேட்டேன். அவன், ஆம் தெரிகிறது, நீங்கள் பில்கேட்ஸ் என்றான். பல வருடங்களுக்கு முன் இரண்டு முறை எனக்கு நீ இலவசமாக நாளிதழ்களை வழங்கினாய். தற்போது நீ என்னவெல்லாம் விரும்புகிறாயோ அதை எல்லாம் உனக்கு கைமாறாக தர விரும்புகிறேன் என்றேன்.

உங்களால் அதற்கெல்லாம் ஈடுசெய்ய முடியாதே என அந்த இளைஞன் கூறினான். ஏன் என்றேன்?

அதற்கு அவன், நான் ஏழையாக இருந்தபோது கொடுத்தேன். ஆனால் நீங்கள் பணக்காரர் ஆன பிறகே எனக்கு கொடுக்க வருகிறீர்கள். ஆகவே நீங்கள் எவ்வாறு அதை சரிக்கட்ட முடியும் என்றான். அன்றுதான் உணர்ந்தேன் என்னை விட பணக்காரன் அந்த கறுப்பின இளைஞனே என்பதை.

உதவி செய்ய நாம் பணக்காரனாகவோ அல்லது பணக்காரன் ஆகும்வரையோ காத்திருக்க வேண்டும் என்பதோ, நல்லநேரம் பார்த்தோ உதவவேண்டும் என்பதோ கிடையாது. மனம் இருக்க வேண்டும்.